சென்னை: ராயப்பேட்டையில் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் உட்கட்சி தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள்
வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அதிமுகவின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி பிரபாகர் பங்கேற்றனர்.
குண்டை தூக்கிப் போட்ட ஓபிஎஸ்: இதில் முதலாவதாக பேசத் தொடங்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜெயிலில் இருக்கும் போது தனக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு கட்சிப்பொறுப்பு வழங்க வேண்டும் என்றார். அப்போது சட்டென்று குறுக்கிட்ட ஓபிஎஸ், முதலில் மாவட்டச்செயலாளர்களை மாற்ற வேண்டும் என பெரிய குண்டை போட்டார். இதற்கு, தற்போது எதற்கு மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற வேண்டும் என ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
இக்கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “அம்மா இருக்கும்போது மாவட்டச்செயலாளர்களை மாற்றுவது இயல்புதான். ஒருவர் கட்டுப்பாட்டில் மாவட்டம் இருப்பதனால் பிரச்னைகள் வருகிறது. சென்னையில் கூட மாவட்டச்செயலாளர் ஆதிராஜாராம் மீது புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதையெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதையடுத்து, தேனி மாவட்டச் செயலாளர் சையது, நீங்கள் சொல்லி தான் கட்சி விரோதச்செயல்களில் ஈடுபடுகிறாரா, அவரைக் கட்சியிலிருந்து நீக்கலாமா என ஈபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு, புகார் வந்தவர் மீது நடவடிக்கை எடுப்போம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
வாய்த்தகராறில் ஈடுபட்ட மூத்த நிர்வாகிகள்: இவர்களைத் தொடர்ந்து பேசிய வைத்திலிங்கம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தனக்கு தரும்படி கோரிக்கை வைத்தார். மேலும் கடந்த காலங்களில் தனது மாவட்டத்தில் வேலுமணி அரசியல் செய்தார் என்ற குற்றச்சாட்டை கூறினார். இனிமேல் இதுபோன்று தவறுகள் நடக்க கூடாது என வைத்திலிங்கம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய வேலுமணி, நீங்கள் கூட மற்ற மாவட்டங்களில் தலையிட்டு நாட்டாமை செய்வதாக வைத்திலிங்கத்திடம் கூறினார்.
பின்னர், வடமாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதிக்கம் செலுத்துகிறார் என வைத்திலிங்கம் கூறி முடிக்கும் நேரத்தில் வெகுண்டெழுந்த சி.வி. சண்முகம், 'இந்த நாட்டாமை எல்லாம் தஞ்சாவூர்ல வச்சுக்கோ' என தடித்த வார்த்தைகளில் பேச ஆரம்பித்தார். பின்னர் சற்று நேரம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மற்றவர்கள் முகம்சுழிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.
நடையை கட்டிய வைத்திலிங்கம்: 'இப்படியே பேசிட்டுப் போனா அடுத்து வரக்கூடிய தேர்தலில் வெற்றி பெற முடியாது. பேசாம சசிகலாவை கட்சியில் இணைத்து வலுப்படுத்துவோம்' என வைத்திலிங்கம் சொல்லி முடிக்க, சி.வி. சண்முகமும், ஜெயக்குமாரும் கூட்டாக எழுந்து 'அந்த அம்மாவைப் பற்றி ஏன் இப்போது இங்கு பேச வேண்டும்’ என்று காரசாரமாக பேச்சைத் தொடங்கினர்.
இதையடுத்து மூத்த நிர்வாகிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அறையில் இருந்து சத்தம் அதிகரித்தது. அறையின் வெளியே நின்று கொண்டிருந்த நிர்வாகிகள், உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க வருவதற்குள், கட்சி அலுவலகத்தில் இருந்து வைத்திலிங்கம் கோபமாக புறப்பட்டுச்சென்றார்.
ஓபிஎஸ் தான் காரணமா..? பின் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் மற்றும் அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச்செயலாளர் கமலக்கண்ணன் இருவரும் வைத்திலிங்கத்தை சந்தித்து சமாதானம் செய்தனர். இதையடுத்து மாலை 9.20 மணி அளவில் மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு வந்தார், வைத்திலிங்கம்.
ஆனால், வைத்தியலிங்கம் வெளிநடப்பு செய்ததற்கு ஓபிஎஸ் தான் காரணம் என சிலர் புலம்பினர். அதாவது சசிகலாவின் ஆதரவாளராக ஓபிஎஸ்ஸை சித்தரித்து, ஓரம் கட்டுவதாக வெளியாகிய தகவலால் சுதாரித்துக்கொண்ட ஓபிஎஸ், வைத்திலிங்கத்தைத் தூண்டி அதிமுக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய வைத்து, மீண்டும் தொலைபேசியில் அழைத்ததால் வைத்தியலிங்கம் திரும்பி வந்தார் என கூறப்படுகிறது.
முட்டுக்கட்டை போடும் ஓபிஎஸ்: மேலும் அதிமுக-வில் அமைப்புரீதியாக உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 80 விழுக்காடு பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடி தரப்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள்தான். மேலும் 68 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறார்கள். இதன்காரணமாக ஓபிஎஸ், தன் ஆதரவாளர்களுக்கு வருகின்ற உள்கட்சி அமைப்புத்தேர்தலில் எப்படியாவது பொறுப்பு வாங்கித்தர வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் எந்த அளவிற்கு தனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் சூழ்நிலையில் ஓபிஎஸ் இருப்பதாகவும், ஈபிஎஸ்-ன் ஒற்றைத் தலைமைக்கு முட்டுக்கட்டை போட என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்யத் தயாராக உள்ளதாகவும் அதிமுக மூத்த நிர்வாகி தெரிவித்தார். மேலும் முதலில் கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்திக்கொண்டு, பின்னர் கட்சி பதவிகள் ஒதுக்கிக்கொள்ளலாம் என்று பேசப்பட்டதாக மூத்த அதிமுக நிர்வாகி தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின்சாரத்துறை அமைச்சரை கலாய்த்த செல்லூர் ராஜூ