சென்னை புறநகர் மின்சார ரயில்களில் வரும் 15ஆம் தேதி முதல் ஆண், பெண் என இருபால் கல்லூரி மாணவர்களும், கூட்டம் அதிகமாக உள்ள உச்சபட்ச நேரங்களிலும், கூட்டம் குறைவாக உள்ள சாதாரண நேரங்களிலும் பயணிக்கலாம் என தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் பயணிக்கும்போதும், பயணச் சீட்டு, மாதாந்திர பயண அட்டை பெறும்போதும் அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று பாதிப்பு சற்று கட்டுக்குள் வந்ததும், கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
ஆனால், மாணவர்கள் சென்று வர போதிய பேருந்து வசதி இல்லாததால் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை வைக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், மாணவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முதற்கட்ட அரசுப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது. பின்பு படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டது. மெல்ல மெல்ல இயல்பான சேவை மீண்டும் தொடங்கப்படும் என ரயில்வே அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சென்னை புறநகர் ரயில்களில் பெண்களுக்கு நேரக்கட்டுப்பாடு நீக்கம்...!