சென்னை ஆதம்பாக்கம், இந்திரா காந்திநகர், ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (24). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை பார்த்துவருகிறார். இவர், ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர், முதல் தெருவில் நேற்று முன்தினம் (டிச. 31) இரவு தனது உறவினர் தீபக், 19 என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சாலையின் நடுவே, ‘கேக்’ வெட்டிய கும்பல் ஒன்று, விமலுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. அங்கிருந்தவர்கள் உதவியுடன் விமலை மீட்ட தீபக், ஆட்டோ மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விமல் தற்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, வழக்குப்பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடிவந்த நிலையில் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அருண்குமார் (22), மணிகண்டன் (25), அஜித் (21), பூபாலன் (21), செங்கல்பட்டைச் சேர்ந்த வேந்தன் (23), தரமணியைச் சேர்ந்த சங்கர் (24), 17 வயது சிறுவன் என ஏழு பேரை, கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். திடீரென ஏற்பட்ட தகராறில் குடிபோதையில் விமலை வெட்டிவிட்டதாக குற்றாவாளிகள் தெரிவித்தாக காவல் துறையினர் கூறினர்.