தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டிவருகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஒவ்வொரு கல்லூரியிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட, அதிக அளவிற்கு விண்ணப்பங்கள் வந்தபடி உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மட்டும் 20 விழுக்காடு இடங்களை அதிகரித்துக் கொள்வதற்கு அனுமதி அளித்து உயர் கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, ஜூன் 3ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் அந்த உத்தரவில் அறிவியல் பாடப்பிரிவுகளை பொறுத்தவரை அங்குள்ள ஆய்வுகள் வசதிக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை இடங்களை 20 விழுக்காடு வரை அதிகரித்துக் கொள்ளலாம். அந்தந்த கல்லூரிகள் சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதியினை இந்தக் கூடுதல் இடங்களுக்கு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 91 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 74 ஆயிரத்து 402 இடங்கள் இருக்கின்றன. இதில் 20 விழுக்காடு வரை என்ற வகையில், 14 ஆயிரத்து 880 இடங்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துவிட்டு இருக்கும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.