தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகரய நகர், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் வழக்கத்தை விட இரவு நேரங்களில் கூடுதல் காவலர்களைப் பணியில் ஈடுபடுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் நீதிமன்ற உத்தரவுகளை முன்னெடுத்து பல்வேறு நடவடிக்கைகளைக் காவல் துறையினர் அமல்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக நீதிமன்றம் தெரிவித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பட்டாசுகளைப் பொதுமக்கள் வெடிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.