சென்னை: நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்து உள்ளனர்.
வங்கக்கடலில் நிலவி வரும் மிக்ஜாம் (MICHAUNG) புயலால் சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், இப்புயலானது சென்னைக்கு மிக அருகில் இருப்பதால், தொடர்ந்து காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (டிச. 3) இரவு முதல் பெய்து வரும் பலத்த மழையால் சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், அண்ணாநகர், தி.நகர், பட்டாளம், வியாசர்பாடி, கொரட்டூர், மயிலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், தரமணி, அடையாறு, நந்தனம், திருமங்கலம், அத்திப்பட்டு, அயப்பாக்கம் ஆகிய இடங்களில் மழைநீரானது முழுவதும் சூழ்ந்துள்ளது. இதே போல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய கடலோர மாவட்டங்களிலும் காற்றுடன் கூடிய கனமழையானது பெய்து வருகிறது.
இதனையடுத்து, தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி இணைந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரணமாக முதற்கட்ட நிதியாக ரூ.10 லட்சம் உதவித் தொகை அறிவித்து உள்ளனர்.
மேலும், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தங்களது ரசிகர் மன்றம் மூலமாக மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரையுலகம் தரப்பில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர் வெள்ள பாதிப்புகளுக்காக முதன் முதலாக நிவாரண தொகை அறிவித்துள்ளனர். இதன் பின் மற்ற பிரபலங்கள் வெள்ள நிவாரணம் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக்ஜாம் புயல்; இன்று இரவு வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை!