சென்னை: தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் பிரிக்கமுடியாதது என்று கூறலாம். தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் அதிகம். குறிப்பாக, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் திரைத்துறையில் இருந்து அரசியலில் தடம் பதித்தவர்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய் அரசியலில் தடம் பதிக்க முயற்சி செய்து வருகிறார். நடிகர் விஜய் அரசியல் சார்ந்த கருத்துகளை அவரது புதிய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் பேசுவது வழக்கம். ஆனால், மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் அரசியல் பேசியிருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கல்வி விருது வழங்கும் விழா நேற்று (ஜூன் 17) நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நடிகர் விஜய் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
இந்த விழாவில் மாணவ மாணவிகளிடையே பேசிய நடிகர் விஜய், "நீங்கள்தான் அடுத்த தலைமுறை வாக்காளர்கள். வாக்களிக்கும்போது, 'நம்ம விரலை வைத்து, நம்ம கண்ணையே குத்திக் கொள்கிறோம்'. படிப்பைக் கடந்து பிற துறைகளிலும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 'நம்மிடம் காசு, நிலம் இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், படிப்பை எடுக்க முடியாது' என்ற ஒரு படத்தின் வசனம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீங்கள் ஓட்டுக்கு காசு வாங்கக் கூடாது, பெற்றோர்களையும் காசு வாங்க வைக்க கூடாது" என்று கூறினார்.
நடிகர் விஜயின் இந்த பேச்சு அவரது அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், நடிகர் விஜயின் அரசியல் கனவு இன்று தொடங்கியது அல்ல. இதற்கான அடித்தளத்தை கடந்த 2009ஆம் ஆண்டே விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் போட்டிருந்தார். அப்போதே விஜயின் ரசிர்களை ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கம் என்று செயல்பட ஆரம்பித்தனர். கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டதாக எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து நடிகர் விஜய் மெளனம் காத்தார்.
இதையும் படிங்க: என்னுடன் விஜய் ஒத்துப்போகிறார் - கார்த்தி சிதம்பரம் கொடுத்த அந்த ரியாக்ஷன்!
கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் தலைவா படம் வெளியானது. தலைவா படத்தின் தலைப்பிற்கு கீழ் 'டைம் டூ லீட்' (Time to lead - தலைமையேற்க சரியான தருணம்) என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அப்போதைய அதிமுக ஆட்சியால் படம் வருவதற்கு சிக்கல் ஏற்பட்டது. ஒரு சில சமரசத்திற்குப் பிறகு தலைவா படம் திரைக்கு வந்தது. அதில் இருந்து பெரிய அளவிற்கு விஜயின் அரசியல் பேச்சுகள் இல்லை. நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ரத்த தான முகாம்கள் நடத்துவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குப் பிறகு அரசியலில் இறங்குவதற்கானப் பணிகளை விஜய் தீவிரப்படுத்தியதாக கூறப்படுகிறது. சர்க்கார், மெர்சல் போன்ற படங்களில் விஜய் அரசியல் பேசத் தொடங்கினார். ஆனால், கடந்த 2020ஆண்டு விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முயற்சித்தபோது, விஜய்க்கும் எஸ்.ஏ. சந்திரசேகரும் மோதல் ஏற்பட்டது.
தன்னுடைய அனுமதி இல்லாமல் தனது பெயரைப் பயன்படுத்தக்கூடாது என விஜய் தெரிவித்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் எஸ்.ஏ. சந்திரசேகரின் கணக்காக இருந்தது. ஆனால், அதற்கு நடிகர் விஜய் மறுத்துவிட்டார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 139 இடங்களில் வெற்றிபெற்றனர். இவர்களை அழைத்து அனைவருடனும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார், நடிகர் விஜய்.
சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் கைப்பற்றவில்லை. நடிகர் விஜயின் அரசியல் வேகத்தை குறைப்பதற்காக இந்த சோதனை நடைபெறுவதாக பேசப்பட்டது. அரசியலுக்கு வருவேன் எனக் கூறிய நடிகர் ரஜினி, அதன் பிறகு வரவில்லை என்று கூறிவிட்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் அரசியலுக்கு வந்த கமல், பெரிய அளவில் வளர முடியவில்லை. இந்த சூழலில்தான் நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் முனைப்பில் இருக்கிறார்.
விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசியது குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்காதது நல்லதுதான். நடிகர் விஜய் மட்டும் அல்ல, அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகிய தலைவர்களைப் படிக்க வேண்டும் என்று கூறியது பற்றி நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்" என்று கூறினார்.
இது தொடர்பாக பேசிய அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், "உண்மையிலேயே நல்ல நோக்கத்திற்காக மாணவ மாணவிகளை அழைத்துப் பரிசு வழங்கி இருந்தால் பாராட்டுகள். வாக்கை மையமாக கொண்டு நடிகர் விஜய் இதை செய்திருந்தால் அவருக்கு என்னுடைய அனுதாபங்கள். சேவை மனப்பான்மை என்பது ரத்தத்தில் இருக்க வேண்டும். அதே போன்று சேவை மனப்பான்மை கொண்ட எண்ணம் சிறு வயது முதல் இருக்க வேண்டும். ஒரு துறையில் புகழ்பெற்ற பிறகு, அந்தப் புகழை வைத்து அரசியல் லாபம் தேடுவது வெற்றியைத் தராது" எனக் கூறினார்.
இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது, அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகிய தலைவர்களைப் படிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் கூறுவது நல்லதுதான். நடிகர்களில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், அவர்களை அரசியல்வாதிகளாக ஆக்க முடியுமா? என்பதுதான் கேள்வி. எம்.ஜி.ஆர் அதிமுகவைத் தொடங்கும்போது 15,000 ரசிகர் மன்றங்களை அதிமுகவின் கிளைக் கழகமாக மாற்றினார். மேலும், எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் திராவிட சித்தாந்தங்கள் குறித்து அதிமாகப் பேசினார்.
விஜயின் ரசிகர் மன்றங்கள் அந்தளவுக்கு அடிமட்டத்தில் இல்லை. திராவிடக் கட்சிகள் போன்று அடிமட்ட அளவிற்கு கவனம் செலுத்தி கட்டமைப்பை உருவாக்கினால் நடிகர் விஜய்க்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அது 2026 அல்லது 2031 என்று சொல்ல முடியாது. தொடர் செயல்பாட்டின் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம். விஜயின் ரசிகராக இருக்கக்கூடியவர் பிற கட்சியில் இருப்பார்கள். அவர்களையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும். தற்போது விஜய் அரசிலுக்கு வந்தாலும், 2026-ல் ஆட்சியைப் பிடிப்பது கடினம்தான்" என கூறினார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒரு சோதனையோட்டமாக வைத்துக்கொண்டு, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் முழுமையாக அரசியலில் நடிகர் விஜய் இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளைத் தாண்டி நடிகர் விஜய் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: "ஓட்டுக்கு காசு வேணாம்! அப்பா, அம்மா கிட்ட சொல்லுங்க" - அரசியல் அட்வைஸ் சொன்ன விஜய்