சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என விஜயலட்சுமி எழுதிக் கொடுத்த கடிதத்தின் படி காவல்துறை அந்த வழக்கை கைவிட்டனர்.
பின்னர், இது தொடர்பாக கடந்த மாதம் 26ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பழைய வழக்கை விசாரிக்க வேண்டும் என சீமான் எதிராக புகார் மனு கொடுத்தார். சீமான் ஆதரவாளர் செல்வம் என்பவர் தன்னை மிரட்டி வருவதாகவும், ஒரு கோடி ரூபாய் தந்ததாக தொடர்ந்து மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்தார்.
சீமான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் கடந்த மார்ச் மாதம் முதல் தனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஐந்து மாதத்திற்கு கொடுத்து உதவியதாவும் அதன் பிறகு தன்னை தொடர்பு கொள்ளாமல் ஆட்களை வைத்து மிரட்டி வந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் வளசரவாக்கம் போலீசார் பழைய வழக்கை மீண்டும் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு பெங்களூர் புறப்பட்டு செல்வதாக தெரிவித்தார்.
தற்கொலை மிரட்டல்: இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி இடம் மான நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடரப்போவதாகவும், இது தொடர்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் சீமான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் "மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்வதாக தன்னை தொந்தரவு செய்து வந்தால், தானும் தனது உடல்நிலை சரியில்லாத சகோதரியும் தற்கொலை செய்து கொள்வோம். தனக்கு நீதி கிடைக்கும் என நம்பி தான் சென்னை வந்தேன். செல்வம் என்பவர் தனக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் என் வங்கி கணக்கிற்கு சீமான் அனுப்ப சொன்னதாக 5 மாதம் அனுப்பி வந்தார்.
இந்த நிலையில் ஒருநாள் செல்வம் என்னை தொடர்பு கொண்டு உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளேன் என கூறி மிரட்டினார். இதனால் தான் மீண்டும் சென்னைக்கு வந்தேன். ஆனால் போலீசார் இந்த விசாரணையை துரிதப்படுத்தவில்லை. எனவே இந்த வழக்கை வேறு வழியின்றி வாபஸ் பெற்றுக் கொண்டு சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்டு சென்று விட்டேன்.
மேலும் தன்னை அச்சுறுத்தும் விதமாக தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மீண்டும் மான நஷ்ட ஈடு வழக்கு என்று கூறி தனக்கு தொல்லை கொடுத்தால் தானும் தன் உடல்நிலை சரியில்லாத சகோதரியும் தற்கொலை செய்து கொள்வோம்" எனக் கூறி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவர் கைது!