சென்னை: பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று (ஜூலை 11) சந்தித்தார். மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழாவை சிறப்பாக நடத்தியதற்காக பாராட்டியதாகவும், நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டதாகவும், நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர். ரசிகர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும் கொண்டாடும் ஒரு நடிகர். இவரது படங்கள் வியாபார ரீதியாக தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், திரைத்துறையில் சாதித்து வரும் விஜய் அடுத்ததாக அரசியலில் தடம் பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, நடிகர் விஜய் பல சினிமா நிகழ்ச்சிகளிலும் பேசி வந்தார். தற்போது தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக இவர் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக (Vijay Makkal Iyakkam) மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இதன் ஒருபகுதியாக, கடந்த மாதம் 17ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தி பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் அரசியல், தேர்தல் ஆகியவை குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது. மேலும் கிட்டத்தட்ட 13 மணி நேரம் நின்று அத்தனை பேருக்கும் பரிசு வழங்கினார். இந்த நிலையில், பள்ளி மாணவ மாணவிகளை அழைத்து பாராட்டிய நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை அழைத்து நடிகர் விஜய் பாராட்ட உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று (ஜூலை 11) மதியம் 2.45 மணிக்கு விஜய் வருகை தந்தார். இதைத்தொடர்ந்து அங்கு வந்திருந்த மாவட்ட பொறுப்பாளரகளை சந்தித்தார். மேலும், 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மாலை 4.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார்.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்வில், இன்று முதற்கட்டமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து பாராட்டியுள்ளார். முதல் நாளான இன்று சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், விருதுநகர், அரியலூர், திருச்சி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, திருப்பூர், சிவகங்கை, நாகை, பெரம்பலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 10கும் மேற்பட்ட ஒன்றிய, நகர, பகுதி, வட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசிய விஜய், 'பெற்றோர்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாகவும். இதேபோல் எப்போதும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் இயக்க நிர்வாகிகளுக்கு ஊக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இன்று காலை எழும்பூரில் உள்ள சுதந்திர வீரர் மாவீரர் அழகுமுத்துகோன் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவச்சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், கிளை தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Rahul Gandhi : "ஆக்ரோஷமாக பிரசாரம் செய்யுங்கள்... காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது..." ராகுல் காந்தி!