காவல் உதவி ஆய்வாளராக இருக்கும் மனோஜ் தனக்கும், தனது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்துவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சிலமாதங்களுக்கு முன்பு நடிகர் தாடி பாலாஜி புகார் அளித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி கீழ்பாக்கம் துணை ஆணையர் அலுவலகம் சார்பில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து அவர் இன்று கீழ்பாக்கம் காவல்துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார்.
இதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் மீது சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்து இருந்தேன். அவர் காவலராக இருந்து கொண்டு பல தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு எதிராக இதுவரை யாரும் புகாரளிக்க முன்வரவில்லை. அதுபோல் நடவடிக்கை எடுக்காமல் பணியிடமாற்றம் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளார்.
போகும் இடத்திலும் இதே செயலில் தான் அவர் ஈடுபடுவார். நான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை முறையாக நடத்த வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு என்னை அலைகழிக்கின்றனர். மேலும் உதவி ஆய்வாளர் மனோஜ் என்னுடைய செல்போனை டிராக் செய்கிறார். இதே நிலை நீடித்தால் பல பெண்களின் வாழ்க்கை சீரழியும் என்றார்.