தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (மே 11) வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அப்படி அளிக்கப்படும் நன்கொடைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், தடுப்பூசிகள், பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் வேண்டுகோளையடுத்து, நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கரோனா தடுப்பு நிதிக்கான காசோலை 1 கோடி ரூபாயை வழங்கினர். அப்போது அவர் மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
கரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றி ஆக வேண்டும்
முதலமைச்சரைச் சந்தித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நடிகர் சிவகுமார், "கரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றி ஆக வேண்டும். அதற்காக அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற வகையில் எங்களால் முடிந்த சின்னத் தொகை ஒரு கோடி ரூபாயை அரசுக்கு அளித்துள்ளோம். நீங்களும் ஆரோக்கியமாக இருங்கள். மக்களும் ஆரோக்கியமடைய வேண்டிக் கொள்ளுங்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆன சந்திப்பைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், அவரது தந்தையை சுமார் 30 ஆண்டுகளாக சந்தித்திருக்கிறேன். அவரது அரசியல் வாரிசை முதன்முதலாக சந்திக்கிறேன். இது சந்தோஷமான விஷயம். தமிழில் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால், தமிழ் மொழி காப்பாற்றப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: நெல்லை சிவா: ஊரின் மொழியை வாய்மொழியாக கொண்டவர்