சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் வீட்டு லாக்கரில் வைத்திருந்த கோடிக்கணக்கிலான தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு மூன்று வீடுகள் மாறிய நிலையில், எந்த வீட்டிலிருந்து நகைகள் திருடப்பட்டது எனத் தெரியவில்லை எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி கணக்குகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி முக்கிய நபரான ஐஸ்வர்யா வீட்டின் பணியாளர் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள், 30 கிராம் வைர நகைகள், திருடிய நகைகளில் வாங்கப்பட்ட 1 கோடி மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் இருந்து எவ்வளவு நகைகள் திருடுபோனது என முறையான கணக்குகள் போலீசாரிடம் தெரிவிக்காததால் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவரது தங்கை திருமண நிகழ்வின்போது எடுத்த புகைப்படம் மற்றும் நகைகள் அணிந்திருந்த படங்களை வாங்கி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் மீதமுள்ள நகைகளை மீட்பதற்காக கைது செய்யப்பட்டுள்ள ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை விசாரிக்க மூன்று நாட்கள் போலீஸ் காவல் எடுத்துவிசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தேனாம்பேட்டை போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தின் 18ஆவது எம்.எம் கோர்ட்டில் நடந்ததால் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனை போலீசார் மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியன் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் இந்த மனுவை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியன் அவர்களை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.
மாஜிஸ்ட்ரேட் விசாரணையின்போது போலீசார் அடிப்பார்கள் எனவும், போலீஸ் காவலில் செல்லமாட்டேன் எனவும் ஈஸ்வரி அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. அதற்கு போலீசார் தாக்கக்கூடாது எனவும்; போலீஸ் விசாரணைக்கு ஈஸ்வரி ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் எனவும் மாஜிஸ்ட்ரேட் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரையும் போலீஸ் பாதுகாப்பாக வாகனத்தில் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றபோது கேமராவில் முகம் தெரியாதவாறு போலீஸ் மடியில் படுத்தபடியே இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். வீட்டில் திருடிய நகைகள் எவ்வளவு? திருடிய மீதமுள்ள நகைகளை எங்கே பதுக்கி வைத்துள்ளனர்? சொத்துக்களாக குவித்துள்ளாரா என்பது தொடர்பாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஈஸ்வரி மீதான குற்றவழக்கு குறித்தும் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 2-வது படத்திலேயே கனவு பலித்தது - 'விடுதலை' பட நாயகி பவானிஸ்ரீ