சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி காந்த் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், "கரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதிமுதல் என்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாத நிலையில் அதன்மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக ஆறு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகவே, ஊரடங்கு காரணமாக தனக்கு சொத்துவரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதுவரை அபராதமோ? வட்டியோ? விதிக்கக் கூடாது என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், “நோட்டீஸ் அனுப்பப்பட்ட 10 நாள்களில் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். ஏன் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள். நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதற்காக அபராதம் விதிப்பேன்" என்றார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் வழக்கைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை (அக். 14) வழக்கைத் திரும்பப் பெறுவதாக ஆன்லைன் மூலமாக ரஜினி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை ஏற்ற நீதிபதி அனிதா சுமந்த், வழக்கைத் திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதற்குப் பிறகு இன்று காலை (அக். 15) ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில், தாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். இதன்மூலம் தவறைத் தவிர்த்திருக்கலாம் என ட்விட்டரில் ரஜினி காந்த் பதிவுசெய்தார்.
பின்னர் அவர் திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக ஆறு லட்சத்து 56 ஆயிரத்தை கோடம்பாக்கம் மாநகராட்சி அலுவலகத்தில் காசோலையாகச் செலுத்தினார்.
மேலும் உரிய காலத்தில் வரி செலுத்திய காரணத்தால் ஐந்து விழுக்காடு ஊக்கத் தொகையாக (அதிகபட்சம் ரூ.5000) ரஜினிக்கு வழங்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அனுபவமே பாடம் - ரஜினிகாந்த் ட்வீட்