கவிஞர் ஆரூர் நாடன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 1996ஆம் ஆண்டு 'ஜுகிபா' என்ற பெயரில் தன்னுடைய கதை தமிழ் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. அதே கதை மீண்டும் ‘தித் திக் தீபிகா’ என்ற நாவலிலும் 2007ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் "எந்திரன்" திரைப்படம் வெளியான பின்புதான் ’ஜுகிபா’ கதை எந்திரன் திரைப்படமாக எடுக்கப்பட்ட இருந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக 'எந்திரன்' திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் இந்த வழக்கு எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்காக தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு இயக்குநர் ஷங்கருக்கு, எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் 2011-ல் சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனை அடுத்து இயக்குநர் ஷங்கர் கதையைத் திருடவில்லை என்றும் , அந்த கிரிமினல் வழக்கு செல்லாது என உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தில் காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து வழக்கை நடத்தலாம் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த முறை எழும்பூர் 13ஆவது நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 10 ஆண்டுகளாக வழக்கில் ஆஜராகாமல் இருப்பதால், இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எனவே ஷங்கரின் பிடிவாரண்ட்டை திரும்பப் பெறக்கோரி அவரின் வழக்கறிஞர் சாய்குமரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், இயக்குநர் ஷங்கருக்கு எந்தவித பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே பிடிவாரன்ட்டை திரும்பப் பெறக் கோரிய மனு தேவையற்றது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் கடந்தமுறை உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.