மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் கமீலா நாசரை ஆதரித்து அவரது கணவரும் நடிகருமான நாசர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையே, நமது ஈடிவி பாரத்திற்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இது குறித்து விரிவாக தற்போது பார்க்கலாம்.
கேள்வி: தேர்தலில் கமீலா அவர்களுக்கு பக்கபலமாக எந்த மாதிரியான பரப்புரையை முன்வைக்க உள்ளீர்கள்?
- பதில்: நான் அரசியல் ரீதியாக வரவில்லை; எந்தக் கட்சியிலும் இல்லை; நடிகனாகவோ அல்லது கணவனாகவோ வரவில்லை. எனக்கு ஒரு தார்மீக கடமை உள்ளது. அவர்களுடன் ஒரு 35 வருடம் பயணித்த ஒரு நண்பனாக வந்துள்ளேன் அவர்களின் தனித்திறமை, தைரியம், படிப்பு, அணுகுமுறை அனைத்தும் எனக்குத் தெரியும். சமூகத்துக்கும் அது கிடைக்கும் நான் நினைக்கிறேன்- கண்டிப்பாக அவர்களுடைய சேவை சமூகத்திற்கும் தேவை என்று நான் நினைக்கிறேன். கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு மிக முக்கியமான ஒரு தேர்தல் இது... பலவிதமான மாற்றங்களையும் மாறுதல்களை எதிர்பார்க்கிறோம்.
கேள்வி: வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கு?
- பதில்: வெற்றி வாய்ப்பை பற்றி இப்பொழுது நாம் கணிக்க முடியாது. பலமான ஆட்களை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். நாங்கள் முயற்சி செய்வதெல்லாம் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதுதான். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பார்க்கலாம்.
கேள்வி: கமீலாவின் நிர்வாகத்திறமை குறித்து?
- பதில்: அவர்கள் எடுத்துக்கொண்ட வேலையை சிறப்பாக செய்வார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்பு சில காரணங்களால் விலக்கப்பட்டார். நான்கு படங்களை தயாரித்துள்ளார். அவர்களின் கல்வி அறிவு நிச்சயமாக அவர்களுக்கு உதவிகரமாக அமையும்.
கேள்வி: சமீப காலமாக உங்கள் குடும்பத்தில் நிகழும் பிரச்னைகள் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?
- பதில்: எல்லார் வீடுகளிலும் குடும்ப பிரச்னைகள் இருக்கிறது. தேர்தலில் யாரும் வாக்களிக்கக் கூடாது என்பதற்காக அது முன்வைக்கப்பட்டது. அது குறித்து நான் இப்போது பேச விரும்பவில்லை.