சென்னையில் பாதுகாப்பு இல்லை என உணர்வதாக நடிகர் மோகன் சர்மா காவல் ஆணையர் அலுவலகத்தில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
சச்சின், அப்பு, சுயம்வரம், பார்த்திபன் கனவு உள்ளிட்டத் திரைப்படங்களிலும், பல்வேறு சீரியல்களில் துணை நடிகராகப் பணிபுரிந்தவர், மோகன் சர்மா(75). இவர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் தனக்குக் கொலை மிரட்டல் விடுத்த நபரை 1 ஆண்டுகளாகியும் கைது செய்யவில்லை எனக்கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் மோகன் சர்மா புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து வானகரத்திற்கு மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்ல, தனது காரை எடுக்க முயன்றதாகவும்; அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது வீட்டு வாசலில் காரை நிறுத்தி இருப்பதை அறிந்து அவரிடம் இது குறித்து முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த போதை ஆசாமி காரை சாலையில் நிறுத்தி உள்ளதாகக் கூறி, தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இரும்புக் கம்பியை எடுத்து தன்னைத் தாக்க முற்பட்டதாகவும், பின்னர் கொலை மிரட்டல் விடுத்துத் தப்பிச் சென்றபோது உடனடியாக அவரது காரின் எண்ணைப்புகைப்படம் எடுத்ததாகவும் மோகன் சர்மா தெரிவித்துள்ளார்.
பின்னர் தன்னை மிரட்டிச் சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேத்துப்பட்டு காவல் நிலையம், முதலமைச்சரின் தனிப்பிரிவு என 1 ஆண்டில் 3 முறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என வேதனையுடன் நடிகர் மோகன் சர்மா தெரிவித்துள்ளார். சென்னையில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் தனக்கு, தற்போது சென்னையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபரின் கார் எண் புகைப்படத்துடன் புகார் அளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மாணவர்களை கல்லறைக்கு கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி