சென்னை: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தையும் திரைப்பட நடிகருமான சிவகுமார் ஆகியோர் இன்று (ஜன.4) அஞ்சலி செலுத்தினர்.
நடிகரும் தேமுதிக நிறுவனருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் 2023, டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். இவரின் மறைவையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அவரது ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள், திரைத்துறையில் அவருடன் இணைந்து பணியாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள், திரைத்துறை தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து விஜயகாந்தின் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விடத்தில் ரசிகர்கள், தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்த் இறுதி சடங்கில் இல்லாதது வாழ்நாள் துயரம்; கலங்கிய கார்த்தி: இந்நிலையில், இங்கு வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கேப்டன் விஜயகாந்த் மறைந்து விட்டார். நம்முடன் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அவருடைய இறப்பிற்கு அஞ்சலி செலுத்தவில்லை என்பது வாழ்நாள் துயரமாக அமைந்துள்ளது. அவருடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை.
நான் சிறுவாக இருக்கும்போது, அவர் இருக்கும் இடங்களில் எப்போதும் சாப்பாடு போட்டுக் கொண்டே இருப்பார்; அதை யார் வேண்டுமானாலும் போய் சாப்பிடலாம் என்று சொல்வார்கள். அதேபோல், அவருடைய படங்கள் என்றால் எனக்கும் ரொம்ப பிடிக்கும். நான் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக இருந்தால், அவருடைய படங்களைத் தவறாமல் பத்து முறையாவது பார்ப்பதுண்டு.
இதையும் படிங்க: கேப்டன் மில்லர் நிகழ்ச்சியில் கேப்டனுக்கு அஞ்சலி!
பின்னர், நடிகர் சங்கம் தேர்தலில் வெற்றி பெற்றப் பின்பு, அவரை சந்தித்துப் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். நடிகர் சங்கத்தில் மிகப்பெரிய சவால்கள் வரும்போதெல்லாம், நாங்கள் அனைவரும் நினைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மனிதனாக விஜயகாந்த் இருந்தார். ஏனென்றால் அவர் அனைவரையும் வழிநடத்துவது, களத்தில் இறங்கி வேலைப்பார்ப்பது என திறம்பட செயல்பட்டார்" என்று கூறினார்.
மறைந்த கேப்டனுக்கு இரங்கல் கூட்டம்: தொடர்ந்து பேசிய அவர், "ஜன.19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல், அவர் நினைவு நிலைக்கும் படி நாங்கள் செய்யக்கூடிய விஷயம் மற்றும் அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கைகள் ஆகியவை குறித்து அன்றைய தினம் ஆலோசிக்க உள்ளோம் என்று தெரிவித்தார். கேப்டன் அனைவருக்கும் அன்பை வாரி வழங்கினார். அவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அவருடைய தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: இனிக்கும் இளமை டூ சபரிமலை குருசாமி வரை.. விஜயகாந்த் - தென்காசி இடையேயான பந்தம்.. சிறப்புத் தொகுப்பு!