சென்னை: சென்னை கிண்டியிலுள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா 'கலைஞர் 100' என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவிற்கு கருணாநிதி ஆற்றிய பங்கைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ் சினிமாவில் உள்ள 24 சங்கங்களும் இணைந்து இந்த பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, திரைப்பிரபலங்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சியில், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் உயிரே உறவே தமிழே வாழ்க என்று தனது உரையை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, "என்னுடைய நண்பர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தைச் சிறப்பாக நடத்திய அரசியல் பண்புக்கு முதலில் வணக்கம் செலுத்துகிறேன். முதலமைச்சரின் இந்த பண்பு எங்கிருந்தது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் இந்த வணக்கம் கருணாநிதிக்கும் உறுத்தானது தான்.
கருணாநிதியும் தமிழும், கருணாநிதியும் சினிமாவும், கருணாநிதியும் அரசியலும் பிரிக்க முடியாதவை. எனது தமிழ் ஆசான்கள் 3 பேர். கருணாநிதி, நடிகர் திலகம், எம்.ஜி.ஆர் ஆகியோர் தான் என்னுடைய ஆசான்கள். இவர்கள் 3 பேரும் கட்டி எழுப்பியதில் இந்த விழா நடைபெறுகிறது.
சினிமா என்பதன் பலத்தை முழுவதுமாக உணர்ந்தவர் கருணாநிதி என்று சொன்னாலும் அது மிகையாகாது. பாடல்களின் பிடியில் சிக்கி இருந்த சினிமாவை கணல் கக்கும் வசனங்களாக உருவாக்கியது கருணாநிதி தான். தனது கொள்கையை வசனங்களில் புகுத்தும் சாதுர்யம் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரை தனது எழுத்து மூலம் உச்சத்தை அடையச் செய்தவர் கருணாநிதி.
எல்லீஸ் ஆர் டங்கனுக்கு என்கிற ஆங்கில இயக்குநருக்கு நிறைய தமிழ்ப்படங்களை இயக்கினார். அவருக்குப் பிடித்த வசன கர்த்தா கருணாநிதி தான். நவீனத் தமிழ் சினிமாவின் வசன சிற்பி அவர். துணிச்சலான, சாதுர்யாமான முடிவை எடுத்தவர். நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக.. என அந்த நேரத்தில் கூறும் துணிச்சல் கருணாநிதிக்கு இருந்தது. பள்ளிப் பருவத்தில் கருணாநிதி மாதிரி எனக்கும் ஹேர் ஸ்டைல் வைங்க என எனது அக்காவிடம் கூறுவேன்.
கருணாநிதி தன்னை கலை உலகத்தின் பிரதிநிதியாகவே காட்டிக் கொள்ள விரும்பினார். கருணாநிதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எனக்குச் சூட்டிய கலைஞானி என்கின்ற பட்டம் தொடர்கிறது. தசாவதாரம் படம் பார்க்கும் போது ஒரு எழுத்தாளராகக் கருணாநிதி ஒவ்வொரு காட்சிக் குறித்தும் என்னிடம் பேசினார்.
சினிமாவில் அரசியல், அரசியலில் இருக்கும் போதும் சினிமாவை காப்பாற்றியவர் கருணாநிதி. மக்களோடு உரையாடும் வாய்ப்பை கருணாநிதி ஒருபோதும் தவறவிட்டதே இல்லை. 'ராமானுஜம் என்னும் காவியம்' மூலம் மக்களோடு உரையாடினார். அதனைப் பின்பற்றித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நானும் மக்களோடு உரையாடி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அரசியல் கடந்து சினிமாவை கைவிடாததால் தான் அவரை கலைஞர் என அழைக்கிறோம்" - நடிகர் சூர்யா புகழாரம்!