சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் முக்கிய நடிகராக பார்க்கப்படுகிறார். தனது அசுரத்தனமான நடிப்பு மூலம் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். சாதாரண இடத்திலிருந்து தனது கடின உழைப்பு காரணமாக இந்த இடத்தை அடைந்துள்ளார்.
இவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்து வெளிவர உள்ளது. இதுமட்டுமின்றி தனது 50வது படத்தைத் தானே இயக்கி நடித்து வருகிறார். இதுதவிர இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். தனுஷ், நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் கடந்தாண்டு பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தனர். இந்த செய்தி கேட்டு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இருவரையும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர் எடுத்த முயற்சியும் வீண் போனது. தற்போது, இருவரும் பிரிந்து அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்து இருப்பதால் மகன்கள் இருவரும் கொஞ்ச நாள் தனுஷ் உடனும், கொஞ்ச நாள் தாத்தா ரஜினி வீட்டிலும் தங்கி வருகின்றனர். இந்த நிலையில், தனுஷ் போயஸ் கார்டனில் ரஜினி வீட்டின் அருகே ரூ.150 கோடி மதிப்பில் புதிய வீட்டைக் கட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறினார்.
இந்த வீட்டில், தனுஷ் தனது பெற்றோர் உடன் வாழ்ந்து வருகிறார். தான் செல்லும் சினிமா நிகழ்ச்சிகளுக்குத் தனது இரண்டு மகன்களையும் அழைத்துச் செல்வதை நடிகர் தனுஷ் வழக்கமாக கொண்டு உள்ளார். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் கடந்த 4ஆம் தேதி நடிகர் தனுஷின் மூத்த மகன் ஹெல்மெட் இல்லாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக வீடியோ வெளியாகி வேகமாக பரவியது.
தனது தாத்தா வீட்டில் இருந்து தனது தந்தை தனுஷ் வீட்டிற்கு அவர் இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அடுத்து, சென்னை போக்குவரத்து காவல்துறை நடிகர் தனுஷின் வீட்டிற்குச் சென்று அவரது மூத்த மகனுக்கு அறிவுரை வழங்கினர்.
அதோடு மட்டுமல்லாமல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை இயக்கியதற்காக அபராதமும் விதித்தனர். மேலும், பயிற்சியாளர் உதவியுடன் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் இயக்கியதற்கு மட்டும் காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தாலும், பயிற்சியாளர் உதவியுடன் தான் அவர் இரு சக்கர வாகனத்தை ஓட்டி உள்ளதாகவும், அதுவும் அவரது தெருவில் தான் ஓட்டியுள்ளார் என்றும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "திருமணமான மகன் உயிரிழந்தால் சொத்தில் பங்கு கேட்க தாய்க்கு உரிமையில்லை" - சென்னை உயர் நீதிமன்றம்!