சென்னையைச் சோ்ந்தவர் நடிகா் பப்லூ பிரித்திவிராஜ் (55). இவர் அஜித்துடன் இணைந்து 'அவள் வருவாளா', சூர்யா நடிப்பில் வெளியான 'வாரணம் ஆயிரம்', நாகார்ஜுனா நடிப்பில் வெளியான 'பயணம்' உள்ளிட்ட சில படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் வழியாக சென்னை வரும் ஏா் ஏசியா தனியாா் பயணிகள் விமானம் இன்று காலை சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்து நின்றது. அந்த விமானத்தில் நடிகர் பப்லூ உள்பட 148 பயணிகள் பயணம் செய்தனர்.
சென்னை விமானநிலையத்தில் விமானம் நின்றதும் பயணிகள் எழுந்து தலைக்குமேல் லக்கேஜ்கள் வைக்கும் கபோா்டிலிருந்து தங்களுடைய கையில் கொண்டுவந்த கைப்பைகளை எடுத்தனா். அப்போது நடிகா் பப்லூவும், கொல்கத்தாவை சேர்ந்த பயணி அபய்குமாா்சிங் என்பவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விமானத்திற்குள்ளேயே இருவரும் ஒருவரையொருவா் பிடித்து தள்ளிக்கொண்டனா். விமான பணிப்பெண்கள் இருவரையும் அமைதிப்படுத்தினா்.
அதன்பின்பு விமானநிலையத்திற்குள் கண்வேயா் பெல்ட் அருகே மீண்டும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த சென்னை விமானநிலைய காவலர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம், பப்புலூ தன்னை விமானத்திற்குள் கீழே பிடித்து தள்ளியதோடு, கெட்ட வாா்த்தைகளால் பேசி சண்டையிடுகிறாா் என்று அபய்குமாா் சிங் வாய்மொழியாக புகாா் செய்தாா்.
உடனே காவலர்கள் பப்லூ பிரித்திவிராஜை நிறுத்தி விசாரித்தனா். கொல்கத்தா பயணிதான் தன்னை தரக்குறைவாக பேசினாா் என்று அவா் மீது பப்லூ புகாா் அளித்தார். இதையடுத்து காவலர்கள் இருவரையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.