சென்னை: நியாய விலைக்கடைகளில் குடும்ப உறுப்பினர்களை அலைக்கழித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அளித்துள்ள சுற்றறிக்கையில் பின்வருமாறு:
1. 'தமிழ்நாட்டில் 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை' ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய பின் விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் நியாய விலைக்கடைகளில் இன்றியாமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2. நியாய விலைக்கடைகளுக்குச் செல்ல இயலாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர நபர்கள் , இதற்கென உரிய படிவத்தில் அவரால் அத்தாட்சி செய்யப்பட்ட நபரின் விவரத்தைப் பதிந்து நியாய விலைக்கடையில் கொடுத்து, அந்த நபரின் வாயிலாக உணவுப் பொருட்கள் பெறுவது தொடர்பான விரிவான அறிவுரைகள் ஏற்கெனவே ஜனவரி 2021-ல் வழங்கப்பட்டுள்ளன.
3. ஒவ்வொரு நியாய விலைக்கடையிலும் இதற்கான படிவங்களை இருப்பு வைத்து, தேவைப்படும் அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடையிலேயே விநியோகித்து, பூர்த்தி செய்து, பெற்று தொடர்புடைய நடவடிக்கைகள் அனைத்தையும் நியாய விலைக்கடை பணியாளரே மேற்கொண்டு அட்டைதாரரின் அங்கீகரிக்கப்பட்ட நபர் வாயிலாக உணவுப் பண்டங்கள் விநியோகிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரப் படிவம் இத்துறையின் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
4. இதை உரிய முறையில் செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும் சுற்றறிக்கை மார்ச் 2021 மாதத்தில் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அநேக முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். இதற்கெனவே விற்பனை இயந்திரத்தில் கைரேகை சரிபார்ப்பு இல்லாமல், குடும்ப அட்டையினை மட்டும் ஸ்கேன் செய்து விற்பனைப் பரிவர்த்தனையினை பதிவேட்டில் அங்கீகரிக்கப்பட்ட நபரின் கையொப்பம் பெற்று அவரிடம் பொருட்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மேற்குறிப்பிட்ட அட்டைதாரர்கள் எவரும் நியாய விலைக்கடைகளுக்கு வராமலேயே, அவரால் அத்தாட்சி செய்யப்பட்டவர் வழியாகப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
5. இதுதொடர்பாக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சரும் சட்டப்பேரவையில், 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் யாரும் வந்து கைரேகைப் பதிந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், நியாய விலைக் கடைக்கு வர முடியாதவர்களால் அத்தாட்சி அளிக்கப்பட்ட நபர்கள் வழியாகப்பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் 16.08.2021 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. இருப்பினும், தற்போது புகார்கள் பெறப்படும் நிலையில், இதுவரை அங்கீகாரப் படிவம் அளிக்காத மேற்குறிப்பிட்ட அட்டைதாரர்கள் அங்கீகாரப் படிவத்தினை நியாய விலைக்கடையில் பெற்று, பூர்த்தி செய்து கடையில் வழங்கிய உடனேயே உணவுப்பண்டங்கள் விநியோகிக்க, தொடர்புடையவர்களுக்கு மீண்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதை மீறி இனி, யாரேனும் எந்தக் குடும்பத்தாரை அலைக்கழித்தாலும், அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7.மேலும் , 22.08.2021 முதல் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் வாயிலாக பொது விநியோகத்திட்டப் பணிகளை சிறப்பாக நடைமுறைப்படுத்த மாநிலம் முழுவதும் நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்குப் பயிற்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அப்பயிற்சியின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு, குறிப்பாக , வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளிகளாக உள்ள அட்டைதாரர்களுக்கு உயர்ந்த சேவை வழங்கும் விதம் தொடர்பான பயிற்சியும், அறிவுரைகளும் அனைத்து நியாய விலைக்கடைப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கிராம சபைக் கூட்டம்: தன்னாட்சி அமைப்பின் பொ.செயலாளருடன் நேர்காணல்