சென்னை: ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய கரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அப்போது அவரிடம், கரோனா தடுப்புப் பணிகளில் மக்கள் ஒத்துழைப்பு தர மறுப்பதாகவும், தங்களுக்கு கரோனா தொற்று இல்லை என்று சான்று வைத்திருப்பதாகவும் கூறிவிட்டு பணி செய்ய விடாமல் தடுப்பதாக சில விமான நிலைய சுகாதார அலுவலர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதுபோன்ற கரோனா தடுப்பு பணிகளில் ஒத்துழைப்பு தர மறுப்பவர்கள் மீது அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாநிலம் முழுவதும் விமான நிலையங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை லண்டனில் இருந்து வந்த 37 நபர்களை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் இன்று மாலை வெளியாகும்.
அந்த விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளுக்கும் தொடர்ந்து பரிசோதனை எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்கிறது. வெளிநாட்டில் இருந்து வரக்கூடியவர்கள் அனைவரையும் வீட்டில் தனிமை படுத்துகிறோம். அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இங்கிலாந்தில் இருந்தோ அல்லது இங்கிலாந்து வழியாகவோ வந்த இரண்டாயிரத்து 724 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்து கடந்த 15 நாள்களில் பயணித்தவர்கள் 38 ஆயிரம் பேரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மாநிலத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் முகக்கவசம் அணியாத நிலை தொடர்கிறது. இது வருத்தமளிக்கிறது, தொடர்ந்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இது புதிய வகை கரோனா அல்ல. முன்னதாகவே இருந்த கரோனா வைரஸ் உருமாறி உள்ளது. எனவே பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். இதற்காக அலட்சியமாக இல்லாமல், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொடர்பான ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் 104 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். விமானங்களில் பயணித்தவர்களுக்கும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலும் அவர்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால் அதனை மறைக்காமல் மற்றவர்களுக்கு தீங்கு நேரக்கூடாது என்ற எண்ணத்தோடு முன்வந்து அரசிடம் தெரிவித்து உரிய சிகிச்சை பெற வேண்டும். தடுப்பூசிக்கு அனுமதி கொடுக்கும் பணி மத்திய அரசு உடையது.
மத்திய சுகாதாரத் துறை அலுவலர்கள் இது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் அதிகளவு முதியவர்கள் இருக்கக்கூடிய காரணத்தால் அதிகமான தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: புதிய கரோனா வைரசால் மக்கள் பீதி: சிறப்பு விமானங்கள் ரத்து!