தமிழ்நாட்டில் கரோனா தொற்று பொது முடக்கத்தால் நூலகங்கள் மார்ச் மாதம் இறுதி முதல் மூடப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நூலகங்கள் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை மற்றும் விளையாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பொது நூலகத் துறை இயக்குனர் குப்புசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் 160 நாள்களுக்குப் பின்னர் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள மாவட்ட மையா நூலகங்களான அண்ணா நூலகம், கன்னிமாரா நூலகம் அகியவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்க்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நூலகத்திற்கு வரும் வாசகர்களுக்கு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், உடல் வெப்பத்தினை அளவிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நூலகங்கள் செயல்படும். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு விரைவில் குழுவை அமைக்கும். இந்த குழுவினை அமைத்த பின்னர் யாரும் குறை சொல்லக் கூடாது என்பதற்காக, சிறந்த கல்வியாளர்களை கொண்டு குழு அமைக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.
பள்ளி திறப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அரசு பரிசீலிக்கவில்லை. மத்திய அரசு ஏற்கனவே செப்டம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு கட்டண வசூலில் ஈடுபடக்கூடாது என ஏற்கனவே துறை இயக்குனர்கள் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அதைமீறியும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது, பெற்றோர்கள் புகாரளித்தால் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா