சென்னை : தலைநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களை தடுப்பதும் குற்றச் செயல்கள் நிகழாமல் பார்த்துக் கொள்வதும் போலீசாருக்கு சவாலான விஷயமாக இருந்து வரும் நிலையில் ஒவ்வொரு காவலர்களும் போதைப் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் ஒரே காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவலர்கள் பணி மாற்றம் செய்ய வேண்டும் எனவும் சென்னை வடக்கு காவல்துறையின் கூடுதல் ஆணையர் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்காமல் குற்றச் செயல்களில் உடந்தையாக இருந்ததாக தற்போது 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமைக் காவலர்கள், 14 காவலர்கள் என மொத்தம் 22 காவலர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 22 காவலர்களையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் வியாசர்பாடி, எம்.கே.பி நகர், கொடுங்கையூர், புளியந்தோப்பு, திருவெற்றியூர், ஆர்.கே.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டு காலமாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் 800க்கும் மேற்பட்ட காவலர்கள் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பில் இருப்பதைக் கண்டறிந்து அவர்களை மாற்றம் செய்து கூடுதல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பழைய வழக்குகளில், குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யாமல் உள்ள வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு ஒருவரை ஒருமுறை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவிட்டால் வழக்கு முடிந்து விட்டது என்று எண்ணாமல் கண்டிப்பாக அனைத்து வழக்குகளையும் பின் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.
மேலும், சிறு சிறு வழக்குகளில் அடிக்கடி சிக்குபவர்கள் கூட ஒவ்வொரு வழக்கிற்கும் நீதிமன்றத்திற்குச் சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவர்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதைப் பெருமளவு குறைக்க முடியும் என உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, பழைய வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் தற்போது குற்றப் பின்னணியில் இருக்கும் நபர்களைக் கண்டறிந்து குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் காவலர்கள் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ஒரே காவல் நிலையத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 800 காவலர்களை பணியிட மாற்றம் செய்தும், குற்றச் சம்பவங்களில் உடந்தையாக செயல்பட்டதாக 22 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கேரளாவின் மரியம் குரியன் தமிழ் திரைத்துறையின் குயின் ஆன கதை.. நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷல்!