சென்னை: சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று (டிச.19) அதிகாலை 1.30 மணிக்கு புறப்படத் தயாரானது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை ஸ்கேன் மூலம் பரிசோதித்து, விமானத்திற்கு அனுப்பும் பணியில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த காஜா மொய்தீன் (32) மற்றும் கமுதியைச் சேர்ந்த அகமது இப்ராஹிம் (28) ஆகிய இருவரும் தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல, அந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள வந்துள்ளனர். இந்நிலையில், இருவர் மீதும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை விசாரித்துள்ளனர்.
அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் வலுத்துள்ளது. இதையடுத்து, உடனடியாக இரண்டு பேரையும் நிறுத்தி வைத்த அதிகாரிகள், அவர்களின் உடமைகளை முழுமையாக பரிசோதித்துள்ளனர். இந்த சோதனையில், அவர்களது சூட்கேஸ்களுக்குள் ரகசிய அறைகள் இருந்ததும், அதில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணங்கள் மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இருவரிடம் இருந்தும் ரூ.65 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இருவரது பயணங்களையும் ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள், மேல் நடவடிக்கைகளுக்காக இருவரையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்த சுங்க அதிகாரிகள், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடத்தல் ஈடுபட்ட இருவரும், யாரோ கொடுத்து விட்ட பணத்தை எடுத்துச் செல்லும் கடத்தல் குருவிகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இவர்களிடம் இந்த கடத்தல் பணத்தை கொடுத்துவிட்ட முக்கிய கடத்தல் புள்ளி யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.