சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், சமீபத்தில் நடந்த வேலூர் மக்களவைத் தேர்தலிலும் பார்க்கும் பொழுது 18 விழுக்காட்டிலிருந்து, 48 விழுக்காடு வாக்குகள் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனை பார்க்கும் பொழுது இனிமேல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் இதில் எந்த மாறுபட்ட கருத்துமில்லை. திமுகவைப் பொறுத்தவரைப் பணம் கைகொடுக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பணம் நிச்சயமாக அவர்களுக்கு கை கொடுக்காது.
பொது அமைதி முக்கியம். இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும், விஷமத் தன்மையாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசினால், சும்மா இருக்க முடியாது. சீமான் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தால் நல்லது. ஜனநாயகம் என்பதால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது” எனக் கூறியுள்ளார்.