சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களில் 70 விழுக்காடு பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 30 விழுக்காடு பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 351 ஆசிரியர்களும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் பணியாற்றுகின்றனர்.
இணையதளத்தில் பதிவு
தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆசிரியர்கள், ஊழியர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த விவரங்களை கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
அதேநேரத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 888 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளனர், எத்தனை பேர் போடவில்லை என்ற விபரங்கள் கல்வித்துறையிடம் இல்லை.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது தடுப்பூசி போடாதவர்கள் கல்லூரியை போல் பள்ளிக்கு வர தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி மாணவர்களுக்கு கட்டாயம்