ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் துளசி வம்சி கிருஷ்ணா (37). எம்பிஏ பட்டதாரியான இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு ஆலந்தூர், திருவள்ளூர் நகரில் சுமார் 40 கோடி மதிப்பில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வழிப்பாதை போன்ற பிரச்சனைகள் இருந்து வந்ததால் விற்க முடியாமல் திணறி வந்தநிலையில், விருகம்பாக்கத்தை சேர்ந்த புரோக்கரான பாலாஜி என்பவர் அறிமுகமாகி விற்று கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணா, பவர் ஆஃப் அடானமி உள்பட அனைத்து ஆவணங்களையும் பாலாஜியிடம் வழங்கினார்.
இதையடுத்து கிருஷ்ணாவின் ஒரு ஏக்கர் நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டு பாலாஜி, ரவுடி செல்வ நேசன் உள்பட ஐந்து நபர்கள் இணைந்து கிருஷ்ணாவை கடத்தி விருகம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து, நிலத்தை எழுதிக் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வந்தனர்.
40 நாள்களாக கிருஷ்ணாவை அடைத்து வைத்து இவர்கள் மிரட்டி வந்த நிலையில், நேற்று (அக்.24) கிருஷ்ணா அவரது தாயாரான ரூபாவிற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து உடனடியாக ரூபா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் கிருஷ்ணாவின் செல்போன் எண்ணை வைத்து லாட்ஜிற்கு விரைந்து அடைத்து வைக்கப்பட்ட கிருஷ்ணாவை மீட்டனர். மேலும் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்த புரோக்கர் பாலாஜி, செல்வ நேசன், ஜான்சன், திருமுருகன், சுரேஷ் குமார் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர். ரவுடி செல்வ நேசன் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலத்தில் கள்ளநோட்டு அச்சடித்த நபர்கள் கைது