சென்னை: திருமணத்திற்குப் பின், பெண்கள் தனது கணவர் வீட்டில் வசிப்பதாலும், பெற்றோரின் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படுவதாலும், பெண்கள் பிறந்த வீட்டின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் எனக் கூற முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிராம பஞ்சாயத்துச் செயலாளர் பதவிக்கு, அந்த கிராமத்தில் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த G.மாயக்கண்ணன், B.சரண்யா ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையில் அளிக்கப்பட்ட பரிந்துரையை ஏற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், சரண்யாவைக் கிராம பஞ்சாயத்துச் செயலாளராக நியமித்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
திருமணம் முடித்த சரண்யா கணவருடன் நெய்வேலியில் வசித்துவருவதாகக் கூறி, அவரை கிராம பஞ்சாயத்துச் செயலாளராக நியமித்த உத்தரவை ரத்து செய்து, தன்னை செயலாளராக நியமிக்க உத்தரவிடக் கோரி மாயக்கண்ணன், கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சரண்யா அளித்த சான்றிதழ்களுக்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில், அந்த ஆவணங்கள் போலியானவை இல்லை என அரசு கருதுவதாகச் சுட்டிக்காட்டி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஃபைபர்நெட் ஊழல்; சந்திரபாபு நாயுடு கைது நடவடிக்கைக்கான தடை நீடிப்பு!
நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா தனது உத்தரவில், "பஞ்சாயத்துச் செயலாளர் என்பவர் அவசர பணிக்காக உடனடியாக வேலைக்கு வருவதை உறுதி செய்வதற்காகவும், உள்ளூர் நிலவரங்கள், தேவைகள், பிரச்சனைகளைத் தெரிந்திருப்பார் என்பதால் தான் உள்ளூரைச் சேர்ந்தவர் எனக் குடியிருப்பு சான்றிதழ் தாக்கல் செய்ய வேண்டுமென நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நீதிபதி தனது உத்தரவில், திருமணத்திற்குப் பின் பெண்கள் கணவர் வீட்டில் வசிப்பதுதான் வழக்கம் என்பதாலும், கணவர் குடும்பத்தின் குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பதற்காகப் பெற்றோரின் குடும்ப அட்டையிலிருந்து பெண்களின் பெயர் நீக்கப்படுகிறது என்பதாலும், பெண்கள் பிறந்த வீட்டின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் எனக் கூற முடியாது எனத் தெளிவுபடுத்தி உள்ளார்.
இன்றைய உலகில், கல்வி வேலைக்காக ஆணும், பெண்ணும் பல்வேறு ஊர்களுக்குச் சென்றாலும், தாங்கள் பிறந்த பூர்வீக இடத்தையே நிரந்தர இருப்பிடமாகக் கருதுகின்றனர் என்றும், பூர்வீக இடத்துக்குத் திரும்புவது என்பது திருமணமான பெண்ணின் விருப்பத்திற்கு உட்பட்டது தான்." என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தீண்டாமை வேலி ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை!