சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் தந்துறை பகுதியைச் சேர்ந்தவர், தேவி. இவரது குடும்பத்திற்குச் சொந்தமான 12 சென்ட் நிலம் மற்றும் அதிலுள்ள கடை உள்ளிட்ட சொத்துக்களை, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் போலி ஆவணங்கள் மூலமாக அபகரிக்க முயற்சி செய்து வருவதாகவும், அதேபோல் தனக்கும், தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்து ஆபாசமாகப் பேசுவதாக பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
ஆனால், பட்டாபிராம் காவல் நிலையத்தின் காவலர்கள் இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டியதாக, பாதிக்கப்பட்ட பெண் தேவி குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் ஆவடி துணை ஆணையர் அலுவலகம் முன்பு தேவி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இந்த சூழ்நிலையில், இந்த புகார் மீது ஆவடி துணை ஆணையர் நடவடிக்கை எடுக்கக் கோரியதைத் தொடர்ந்து, தேவி அளித்த புகாரின் அடிப்படையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் தந்துறை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், ரமேஷ், அமுல்ராஜ், சுரேஷ், முருகன் மற்றும் விநாயகம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட தேவி தனது குடும்பத்துடன் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், "தங்களுக்குச் சொந்தமான ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய சொத்தை புகார் அளித்த ஒரு சில தினங்களிலேயே உரிய நடவடிக்கை எடுத்து மீட்டுக் கொடுத்த துணை ஆணையர் மற்றும் காவல்துறையினருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "உங்கள் கோபத்தை நியாயமான பிரச்சினைகளை நோக்கி திருப்புங்கள்".. கிளென் மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் பதிலடி!