சென்னை: தீவுத்திடலில் சிங்கார சென்னை உணவு திருவிழா கடந்த 12ம் தேதி தொடங்கி 3 நாட்களாக நடைபெற்றது.
உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய உணவுகள், 65 வகையான தோசைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், அரிசி, பருப்பு வகைகள், மசாலாக்கள், இயற்கை முறையில் தயாரித்த எண்ணெய் வகைகள், மீன் உணவுகள், சிறப்பு வாய்ந்த நெல்லை இருட்டுக்கடை அல்வா உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் 200 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டன. மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்வதற்காக அரங்குகளும் இடம் பெற்றன.
200 அரங்குகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான உணவுகளை சென்னை மக்கள் ருசித்தனர். சென்னை உணவு திருவிழாவிற்கு 3 நாளில் 60,000 க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். கிராமிய உணவுகளையும் பிரியாணி வகைகளையும் பொதுமக்கள் அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறுதி நாளை முன்னிட்டு மேலும் அதிகமான மக்கள் தீவுத்திடலில் குவிந்தனர். இதனால் 30க்கும் மேற்பட்ட கடைகளில் உணவுப் பொருட்கள் தீர்ந்து போயின. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு உணவு வழங்கப்பட்டதால் சத்தான காரமான உணவை பொதுமக்கள் வாங்கி உண்டனர்.
திருநெல்வேலி அல்வா விருதுநகர் எண்ணெய் புரோட்டா, கோவில்பட்டி கடலைமிட்டாய் மணப்பாறை முறுக்கு முதல் வட இந்திய உணவுகள், பீட்சா ,பர்கர் ,துரித உணவுகள் என எண்ணற்ற உணவு வகைகள் ஒரே இடத்தில் விற்கப்பட்டது பொதுமக்களை தீவு திடல் நோக்கி மூன்று நாட்களாக ஈர்த்தது. 3 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவை அடுத்து வரும் ஆண்டுகளில் 7 நாட்களாக நடத்த உணவு பிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நாளை காந்தியடிகளின் திருவுருவச்சிலையினை திறந்துவைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்