ஈடிவி பாரத் செய்தியாளருக்கு மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் அளித்த பேட்டியில் கூறியதாவது,
“மற்றவர்களை போல் அல்லாமல் நான் ஊழலை பற்றி பேசுகிறேன். ஒரு ரூபாய் திருடு போகக்கூடாது என்கிற அளவுக்கு கணக்குகளில் வெளிப்படைத் தன்மை உருவாக்குவதை பற்றி பேசி மக்களிடம் வருகிறேன். இதை தவிர உள்கட்டமைப்பு வசதி, வேலைவாய்ப்பு என அடுத்த 200 வருடத்திற்கு உதவும் வகையில் சிந்தித்து வருகிறேன். மேலும் நகரத்தின் முக்கிய பிரச்னையான தன்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பது எப்படி. வேறு இடத்தில் இருந்து நீர் பெறுவதற்கான வழிமுறைகளை பற்றியும் பேசி வருகிறோம்.
மேலும் நாம் விரும்பும் சென்னை என்ற புத்தகத்தை எங்களுடைய கட்சி சார்பில் வெளியிட்டு உள்ளோம். இதில் நீர் மேலாண்மையை மேம்படுத்த திருவள்ளூர் பகுதியில் ஏதேனும் அணை எழுப்பி நீரை கொண்டு வர முடியுமா என்றும் முயற்சி செய்யப்படும். நான் வெற்றி பெற்ற பின் 3 முதல் 6 மாதத்திற்குள் இதனை செய்து முடிப்பேன்.
தொகுதி நிதியை கையாள்வதில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. என்னை பொறுத்த வரை தொகுதி நிதியின் அனைத்து கணக்குகளும் நாங்கள் அறிமுகப்படுத்தும் செயலி மற்றும் இணையதளத்தில் பதிவிடப்படும். இதனால் எந்த திட்டதிற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது போன்ற கணக்குகள் மக்கள் அவர்களுடைய செல்போனில் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும், அதுமட்டுமின்றி மாநாகராட்சியில் கொடுக்கப்படும் புகார் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
சரியான வீடு, குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நகரத்தின் உள்கட்டமைப்பு வசதி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவது முதலிய பிரச்னைகளுக்கு மத்திய சென்னையில் முன்னுரிமை அளிக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.