சென்னை: வேளச்சேரி பகுதியில் எஸ்.எம்.ரேகா மணிவண்ணன் என்பவர், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கரோனா காலத்தில் ஏதாவது புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், தமிழ் எழுத்துக்களை கண்ணாடி பிம்பத்தில் (Mirror Handwriting) எழுதும் முறையை தானாகவே எழுத கற்றுக்கொண்டு, உலக அளவில் சாதனைப் படைத்துள்ளார்.
இதுகுறித்து சாதனையாளர் ரேகா கூறுகையில், 'நமது மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கண்ணாடி பிம்பத்தில் பிரதிபலிக்கக்கூடிய வகையில் 3.42 விநாடியில் எழுதி, கலாம் உலக சாதனை மற்றும் இந்திய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளேன். மேலும் இதனை கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று கருதி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கண்ணாடி பிம்பத்தில் (Mirror Handwriting) பிரதிபலிக்கக்கூடிய வகையில், 2.45 விநாடியில்கீழ் இருந்து மேலாக எழுதி, கலாம் உலக சாதனை மற்றும் இந்தியப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன்.
இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் ௭னக்கு கடந்த டிசம்பர் மாதம், உயரிய விருதான டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தனர். அதேபோல் உலக பல்கலைக்கழகத்திலிருந்து, மேலும் ஒரு டாக்டர் பட்டம் கடந்த 11.9.2022அன்று டெல்லியில் கொடுத்துள்ளனர்.
மேலும் நமது தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொழிற்துறை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமைச் செயலகத்தில் என்னை அழைத்துப் பாராட்டியுள்ளார். கரோனா காலகட்டத்தில், நிறைய பெண்களை நேரில் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. திருமணமானால் எந்த துறையிலும் எந்தப்பெண்ணும் சாதிக்க முடியாது என்பதை மாற்றும் விதமாக, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்து, தடைகளைத் தாண்டி இதனை சாதித்துள்ளேன்.
தமிழில் பேசினால் மதிப்பு குறைவு என்றும், தமிழ் மொழிக்கு முன்னுரிமை இல்லாத சூழ்நிலையில், இந்த வாழ்த்துகள் அனைத்தும் நம் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு மட்டும் கிடைத்துள்ளது என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழமொழியை மாற்றி, பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.
இன்றைய தினம் என்னாலும் இந்த சாதனையை செய்திருக்க முடிகிறது. மேலும் பல்வேறு பெண்களுக்கு நானும் ஒரு முன் உதாரணமாகத் திகழ்வது பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரே காகிதத்தில் 1330 திருக்குறள் எழுதி புதுச்சேரி மாணவி சாதனை!