சென்னை: கனடா நாட்டில் அரசு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஸ்ரீதரன்தாஸ்ரத்தினம். இலங்கையை, பூர்வீகமாக கொண்ட இவர் கனடா நாட்டு சிட்டிசனாக குடியுரிமை பெற்று அரசு துறையில் பணியாற்றி வந்துள்ளார். சமீபத்தில் ஓய்வு பெற்ற இவர் இந்தியாவில் உள்ள ஆன்மீக சுற்றுலா தளங்களை சுற்றி பார்ப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி சென்னை வந்துள்ளார்.
அதன் பிறகு சிந்தாதிரிபேட்டை மூசாசாகிப் தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி பல்வேறு ஆன்மிக சுற்றுலா தளங்களுக்கு சென்று வந்துள்ளார். பின்னர் கடைசியாக திருப்பதி சென்று விட்டு வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கனடா செல்ல திட்டுமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தி.நகரில் பாரின் எக்ஸ்சேஜ் அலுவலகத்தில், டாலரை, இந்திய ரூபாயாக மாற்றிவிட்டு திரும்பும் போது டிப்டாப் ஆசாமி ஒருவர் அவரிடம் வந்து பேச்சு கொடுத்துள்ளார். வெளிநாட்டை சேர்ந்தவரா என்று கேட்டு கொண்டே எங்கே தங்கி உள்ளீர்கள், நானும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவன் என்றும் கூறியுள்ளார். தி நகரில் ஹோட்டல் அறைகள் சரியில்லை, நீங்கள் தங்கியுள்ள அறையை காட்டுமாறும், தனக்கும் ஒரு அறை எடுத்துக் கொடுக்குமாறு பேச்சு கொடுத்துள்ளார்.
அதனை நம்பிய அந்த முதியவரும், அவர் தங்கியிருந்த அறைக்கு ஆட்டோ மூலமாக அவரை அழைத்துச் சென்று ஹோட்டலை காட்டியுள்ளார். பின்னர் முதியவரின் அறைக்கு சென்று பேசி கொண்டிருந்த போது, கதவை தட்டி உள்ளே நுழைந்த நபர் ஒருவர் கதவை தாழிட்டுவிட்டு, தான் கமிசனர் அலுவலகத்தில் இருந்து வரும் ஸ்பெசல் போலீஸ் எனவும், நீ போதைப்பொருள் கடத்தி வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என மிரட்டி பாஸ்போர்ட், செல்போன்களை பிடிங்கி வைத்து கொண்டு அவரை மிரட்டி அமர வைத்து விட்டு அறையை சோதனையிடுவது போல நடித்ததாக கூறப்படுகிறது.
பின் பையில் வைத்திருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த ஷு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கூலிங் கிளாஸ் என சுமார் 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை எடுத்துகொண்டு, கீழே போலீஸ் ஜீப் நிற்கிறது. நாங்கள் கீழே சென்றவுடன் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு கீழே வரவேண்டும்.
உன்னை நிர்வாணமாக்கி அடித்தால் தான் உண்மையை சொல்வாய் என பாஸ்போர்ட்டை மட்டும் கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் பயத்தில் உறைந்து போன முதியவர் அவர்கள் இருவரும் கீழே சென்றதும், அவர்களை பின்தொடர்ந்து கீழே சென்ற பார்த்த போது போலீஸ் ஜீப்பும் இல்லை, போலீஸ் எனக் கூறியவர்களும் இல்லை என சொல்லப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காலை முதல் காவல் நிலையத்தில் காத்திருந்தும் போலீசார் புகாரை பெற்றுக் கொள்ளாமல் அலைக் கழிப்பதாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் காவல் நிலையம் வரச் சொல்லியதாக அவர் கூறினார். போலீசார் துரிதமாக செயல்பட்டு உடமைகளையும், பணத்தையும் மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: பாமக மகளிர் அணி தலைவி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - தகாத உறவால் நடந்த கொலை!