சென்னை தியாகராயநகரில் மருத்துவர் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் பெருங்குடி சிவனேசன் (47). கடந்த 27 ஆண்டாக சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தின் உற்பத்தி மேலாளராக (Production Manager) உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் பணிபுரிந்துவந்தார். இவர் சளி மருந்து உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்கு வகித்தவர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இவர், தற்போது கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்ததால் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி விடலாம் எனக் கூறி, கரோனாவுக்கும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியைச் செய்து வந்துள்ளார்.
இதற்காக தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில் மருத்துவர் ராஜ்குமார் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, சோடியம் நைட்ரேட் கரைசலைப் பரிசோதனைக்காக சிவனேசன் குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்த சிவனேசனை, அங்கிருந்தவர்கள் தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும், சிவனேசனின் உடலை மீட்டு ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர். கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செவிலியர் பணி செய்யும் ரோபோ: முதலமைச்சர் நாராயணசாமி இயக்கினார்!