சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமிநகர் இளங்கோ தெருவில் 250 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில், வீடுகளை அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு, வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், பொதுப்பணித்துறை அலுவலர்கள் காவல்துறை உதவியுடன் வீட்டை அகற்றும் பணியை மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 5 நாள்கள் பணி நடைபெற்றுக்கொண்டு வந்த நிலையில் நேற்று (மே 8) கண்ணையன் என்ற முதியவர் ஒருவர் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவர் இன்று (மே 9) உயிரிழந்தார். இவரின் இழப்பு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பசுமை வழிச்சாலையில் உள்ள பறக்கும் ரயில்வே பாலத்தின் கீழே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வு நேரத்தில் இன்னல்: 80 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் பொதுவெளியில் சமைத்து சாப்பிடுகின்றனர். மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் மிகவும் சிரமப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இளங்கோ தெருவில் கறுப்புக்கொடி ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்தச்சூழலில் மதிமுகவின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கோவிந்தசாமி நகருக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அங்கிருந்த மக்களின் நிலைமைகளை கேட்டு அறிந்தனர். மேலும், அரசுக்கு எதிராக போராடி உயிரிழந்த முதியவர் கண்ணையன் வீட்டில் அவரது மனைவியிடம் ஆறுதல் கூறிச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளிப்பு - நடந்தது என்ன?