சென்னை அண்ணா நகர் மேற்கு ஜீவன் பீமா நகரைச் சேர்ந்தவர், தொழிலதிபர் கணேசன். இவர் திருமங்கலத்திலிருந்து அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல இன்னோவா சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத நேரத்தில் சொகுசு கார் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் கார் ஸ்மார்ட் லாக் ஆனதால் கணேசன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் காரின் உள்ளே சிக்கிக் கொண்டார்.
அப்போது கார் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே, காருக்குள் இருந்த கணேசன் அலறத்தொடங்கினார். அவரது சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரை தண்ணீரை ஊற்றி அணைத்து கணேசனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், கணேசனை அவர்களால் மீட்க முடியவில்லை. அப்போது அவரது உடலில் தீப்பற்றிக் கொண்டதால் பலத்த காயம் ஏற்பட்டு புகையில் சிக்கி சுய நினைவிழந்து மயங்கினார்.
இதுகுறித்து உடனடியாக ஜே.ஜே.நகர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த ஜே.ஜே. நகர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் கணேசனை 60 விழுக்காடு தீக்காயத்தோடு மீட்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சமீபத்தில் புதிதாக வாங்கப்பட்ட இந்த இன்னோவா கார் தொழில்நுட்பக் கோளாறால் வெடித்தும் கதவு மூடிக்கொண்டும் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கணவர் படுகொலை - மன உளைச்சலில் மனைவி தற்கொலை