சென்னை: அண்ணாநகரைச் சேர்ந்த ஜான் ராஜன் என்பவர் கடந்த 12ஆம் தேதி மாலை தனது குடும்பத்தினருடன் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலுக்கு சென்றிருந்தார். அப்போது கிட்ஸ் ப்ளே சென்டருக்கு தனது குழந்தைகளுடன் சென்றார். அந்த நேரத்தில் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த ஐபோன் திருடு போனது. இதுகுறித்து ஜான்ராஜன் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கிண்டி காவல் துறையினர் ஆய்வு செய்த போது, வட மாநில இளைஞர் ஒருவர் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கவரை வைத்து மறைத்து நூதன முறையில் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவரை கிண்டி குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மால்களை மட்டுமே குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
வேலைக்காக ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வரும் இந்த திருட்டு கும்பல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தனித்தனியாக பிரிந்து செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது. அதிலும் குறிப்பாக பிடிப்பட்ட 14 வயது சிறுவனை ஏவி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
குறிப்பாக வேளச்சேரி பீனிக்ஸ் மால், அண்ணா நகர் விஆர் மால், ராயப்பேட்டை ஈஏ மால், சிட்டி சென்டர் ஆகிய பகுதிகளில் இந்த கும்பல் கைவரிசை காட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிறுவனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் திருட்டு கும்பலைச் சேர்ந்த மற்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாங்காடு அருகே பணிக்குச்சென்ற ஓட்டுநரிடம் கத்தியைக்காட்டி பணம் பறிப்பு!