சென்னை: மதுரவாயலில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் முதல்முறையாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற குத்துச்சண்டை வீரர்கள் ஒரே மேடையில் போட்டியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு முன்பாக M.M.A குத்துச்சண்டை வீரரான பாலி சதீஷ்வர் இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு முன்பாக நெருப்பில் சாகசம் செய்து காட்டினார்.
முறையான அனுபவம் இல்லாத பயிற்சியாளர்களை வைத்து கையால் தீயை அணைக்கும் சாகசத்தில் ஈடுபட்ட போது அருகே இருந்த பெட்ரோல் கேன் தீயில் சாய்ந்தது. இதில் ஒருவருக்கு கையில் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனை அணைக்க முற்பட்டபோது தரை முழுவதும் தீ பரவியது. இதனால் அருகிலிருந்தவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னல் தண்ணீர் மற்றும் ஈரமான கோணிப்பை வைத்து அந்தத் தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தனியார் விளையாட்டுத் திடலான எவர் லாஸ்ட் பிரேவ் அகாடமியில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற சாகச நிகழ்வில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் முன்னிலையில் சாகசங்களில் ஈடுபடுவது, இதுபோன்ற எதிர்பாராத பெரும் விபத்துக்களைத் தவிர்க்க முடியும். முறையான அனுமதி பெற்று இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதா என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வனப்படையினை நவீனப்படுத்தும் திட்டத்திற்கான அரசாணை வெளியீடு: என்னென்ன?