சென்னை: கோடம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட ராஜபுரணிக்கர் தெருவில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர், பிரசாத் (34). பிரபல ரவுடியான இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு முறை குண்டர் தடுப்புச்சட்டத்திலும் இவர் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது மனைவி குளோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி குடும்பப் பிரச்னை காரணமாகத் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி மனைவி குளோரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதில் இருந்தே பிரசாத் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் நேற்று நள்ளிரவு பிரசாத் வீட்டிற்கு வந்துள்ளார். தனது உறவினர்களுடன் பேசிவிட்டு, வீட்டினுள் சென்று தாழிட்டுக்கொண்ட அவர், தனது உடலில் மண்ணெண்ணெயினை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.
வீடு குடிசை வீடு என்பதால் வீட்டின் மேற்கூரையிலும் தீ பரவியது. வீட்டில் புகை வருவதைக் கண்டு பிரசாத் தீக்குளிப்பதை அறிந்து அருகே வசித்து வரும் பிரசாத்தின் அண்ணன் பிரதீப், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், கோடம்பாக்கம் போலீசாருக்கும் தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் குடிசை வீட்டின் மேற்கூரையில் லேசாக எரியத் தொடங்கிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது பலத்த தீக்காயங்களுடன் பிரசாத் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கோடம்பாக்கம் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரசாத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி பிரசாத் இன்று(செப்.19) காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியின் நினைவு நாள் முடிந்து பிரபல ரவுடி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:செல்பி மோகத்தால் பறிப்போன உயிர்கள்... செம்பரம்பாக்கம் ஏரியில் 2 மாணவர்கள் உயிரிழப்பு...