சென்னை: வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தூய அரசியலை முன்னெடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு எடுக்கும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில் பாரதியின் கருப்பொருள் குறித்தும், சுதந்திரப் போராட்டத்தில் பாரதி ஆற்றிய பங்களிப்பைச் சிறப்பித்தும் விளக்கும் வகையில் தமிழ்நாடு இலக்கிய விழாவின் 3 ஆவது கலந்துரையாடல் நிகழ்வு நடைப்பெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று நான் கூறவில்லை. இரு கட்சிகளிடையே தொகுதி பங்கீடு உள்ளது. எந்தெந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் உள்ளிட்ட பல நகர்வுகள் உள்ளது. எங்களது கூட்டணி குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும்.
தனிப்பட்ட முறையில் யார் மீதும் எனக்கு கோபம் இல்லை. மாநில தலைவராக நான் என்ன செய்தேன், கட்சியின் வளர்ச்சிக்கு என்ன செய்தேன் என்று தனக்கு தானே கேள்வி கேட்கும் நிலைக்கு வந்துள்ளேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தூய அரசியலை முன்னெடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பேன். நிறைய சவால்கள் உள்ளன. ரபேல் கடிகாரம் குறித்தும், திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியல் குறித்தும் ஏப்ரல் 14ஆம் அறிக்கை வெளியிடுவேன்.
பிரதமர் மோடி வரும் 8 ஆம் தேதி சென்னை வந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். ஆன்லைன் ரம்மி மசோதா 2 முறை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் கையெழுத்து இட்டாலும், இடாவிட்டாலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதற்கு தடை ஆணை வாங்கி விடலாம். பலவீனமான மசோதாவாக உள்ளது.
அதை பலப்படுத்தினால் ஆன்லைன் ரம்மியை தடை செய்யலாம். கூட்டணி குறித்து பேசுவதற்கு காலம் உள்ளது. அதை தலைமை முடிவு எடுக்கும். ஆருத்ரா மோசடியில் யார் இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி நிறுவனங்கள் மோசடி குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த அதிமுக ஒருங்கிணையாத அதிமுக என்று நான் கூற முடியாது. அதனை அவர்கள் தொண்டர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி அவதூறு வழக்கு - தீர்ப்பை எதிர்த்து ராகுல் நாளை மேல்முறையீடு?!