சென்னை: ஐபிஎல் 2023 ஆம் ஆண்டின் இறுதி போட்டியானது நேற்று குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணியினருக்கிடையே நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றியை பெற்றது. ஐபிஎல்-ல் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை சென்னை அணி (CSK) பெற்று அசத்தியது.
சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு (MS Dhoni) நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், சென்னையில் ஒரு தோனியின் தீவிர ரசிகர் சென்னை அணி வெற்றியை வித்தியாசமாக கொண்டாடி வருகிறார். அவர் தான், ஆட்டோ ஓட்டுனர் ஸ்பீடு முருகேஷ். சென்னை பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்பீடு முருகேஷ், சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர்.
முருகேஷ் வீட்டு சூழ்நிலை காரணமாக பாதியிலேயே கிரிக்கெட் பயிற்சியை விட நேர்ந்துள்ளது. அதன் பிறகு, தன்னால் விளையாட தொடர முடியாத கிரிக்கெட் பயிற்சியை முருகேஷ் தனது வீட்டருகே உள்ள மைதானத்தில் சிறுவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற கேப்டன் தோனியின் தீவிர ரசிகராக மாறிய ஸ்பீடு முருகேசன், அதன் பிறகு தோனியின் ஸ்டிக்கர், பேனர் என அனைத்து போட்டியிலும் தனது ஆட்டோவில் வைக்க தொடங்கியுள்ளார்.
குறிப்பாக, தோனியின் தீவிர ரசிகர்கள் பலரும் ஒவ்வொரு இந்தியா வெற்றியின் போதும், பேனர் வைப்பது, உடலில் பச்சை குத்துவது என்று பல வித்தியாசமான செயல்களில் ஈடுபட்டு வந்தபோது, ஸ்பீடு முருகேஷ் மக்களுக்கு பயனுள்ள செயலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை (Cricket World Cup) வென்றபோது தோனியின் ரசிகரான ஸ்பீடு முருகேஷ், தனது ஆட்டோவில் ஏறும் பொதுமக்களுக்கு ஒரு நாள் முழுவதும் சவாரி இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இது அனைவரின் பாராட்டையும் பெற்றது. 2011ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே கோப்பையை வெல்லும் அனைத்து போட்டியிலும் ஒருநாள் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு ஸ்பீடு முருகேஷ் ஆட்டோவில் வலம் வருகிறார். இதேபோல, நேற்று (மே 29) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றதால் ஸ்பீடு முருகேஷ் இன்று 'ஆட்டோவில் சவாரி இலவசம்' என்ற பதாகையை ஒட்டியபடி, சென்னை முழுவதும் வலம் வருகிறார்.
இதுகுறித்து ஸ்பீடு முருகேஷ் நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், 'சென்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக, இன்று காலை முதல் 5 சவாரிகள் இலவசமாக ஓட்டி வருகிறேன். பல பேர் தானும் 'தோனி ரசிகன்' தான், பாதி சவாரி கட்டணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என கொடுத்துச் செல்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் எனது ஆட்டோவில் ஏறினர்.
அவர்களிடம் தோனியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் எனக் கேட்டேன். அதற்கு இந்த முறை தோனி பிஸியாக இருப்பதாகவும், அடுத்த முறை கட்டாயமாக சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக அவர்கள் கூறினர்' என்றார். தோனி ரசிகராக ஒருநாள் இலவசமாக ஆட்டோ ஓட்டுவதில் பெருமை கொள்வதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'வெறித்தனம்.. வெறித்தனம்..' வைரலாகும் சிஎஸ்கே ரசிகர்களின் கொண்டாட்டங்கள் வீடியோஸ்!