சென்னை: இறையன்பு ஐஏஎஸ் தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது என ஈடிவி பாரத் முதன்முதலாக செய்தி வெளியிட்ட நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர். ராஜகோபால், தகவல் ஆணையர்களாக இருந்த எஸ்.செல்வராஜ், எஸ்.டி.தமிழ்ச்செல்வன், ஆர்.பிரதாப்குமார், எஸ்.முத்துராஜ், பி.தனசேகரன், எம்.ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 2022 நவம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில், அவர்கள் பதவி விலகினர். இதனால் தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர், நான்கு தகவல் ஆணையர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளது.
பெருமைக்குரிய பணி: கடந்த காலங்களில் தகவல் ஆணையத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைப் பொறுத்தவரை, ஓய்வுபெற்ற பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தகவல் ஆணையத்தில் பதவி என்பது தங்களுக்கு கிடைத்த இரண்டாவது பெருமைக்குரிய பணியாகும். உதாரணமாக முந்தைய ஐந்து தலைமை தகவல் ஆணையர்களில், நான்கு பேர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள்.
குறிப்பாக தலைமைச் செயலாளராக இருந்த கே.ஸ்ரீபதி மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ஆர்.ராஜகோபாலின் செயலாளராக இருந்த ஷீலா பிரியா உள்ளிட்டோர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். மேலும் முன்னாள் டிஜிபி கே.ராமானுஜம், ஓய்வுக்குப் பிறகு ஜெயலலிதாவின் ஆலோசகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிச் செயலராக பணிபுரிந்த இறையன்பு: திமுக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிச் செயலராக பணிபுரிந்த இறையன்பு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசில், தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்புவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவரும் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
தகவல் ஆணையர் தேர்வு: தேர்வுக்குழு அளித்த தகுதியானவர்கள் பட்டியலைக் கொண்டு தகவல் ஆணையர்களை முதலமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் கொண்ட தேர்வுக் குழு கூடி தேர்வு செய்யும். தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதிவாய்ந்த நபர்களின் பட்டியலை, தயார் செய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுவின் தலைவர் நீதியரசர் அக்பர் அலி பிப்ரவரி 14ஆம் தேதி குழுவின் அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார்.
இந்த நிலையில், தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 03) நடைபெற்றது. நிதியமைச்சர் இதில் பழனிவேல் தியாகராஜன் கூட்டத்தில் பங்கேற்றார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதில் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அரசிதழில் வெளியிடப்படும்.
தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளராக உள்ள இறையன்புவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவரும் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பதவி கிடைத்தால் முன்னதாக அவர் பதவியில் இருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறையன்புக்கு அதிக வாய்ப்பு: மாநில தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் துறை வாரியாக என்னென்ன பணிகள் நடந்தன. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. எப்படி பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஒப்பந்ததாரர்கள் யார் யார்? என அரசின் அனைத்து தகவல்களையும் மக்கள் கேட்டுப் பெற முடியும்.
அப்படி கேட்கப்படும் விவரங்களை தலைமை தகவல் ஆணையர் தலைமையிலான குழு தான் இறுதி செய்து விவரங்களைத் தரும். எனவே, இந்தப் பதவியில் ஆளும் அரசுக்கு நெருக்கமானவர்களே நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நம்பிக்கையானவராக கருதப்படும் இறையன்புக்கு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக மாற்ற திட்டம் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்