சென்னை: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று (ஜூலை11) சங்கத்தின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தற்போதைய சூழலில் திரையரங்குகளுக்கு வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்கள்:
1)புதிய திரைப்படங்கள் வெளிவந்து 8 வாரம் கழித்து தான் ஓ.டி.டி தளத்தில் திரையிட வேண்டும். 2)ஓ.டி.டியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்தபிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும்.
3)விளம்பர போஸ்டர்களுக்கு 1% சதவிகிதம் (பப்ளிசிட்டி) நீக்க வேண்டும்.
4)புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% தான் பங்குத் தொகையாக கேட்க வேண்டும்.
5)திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓ.டி.டியில் திரையிடும்போது, அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கை திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ள கோரிக்கைகள்:
1)திரையங்குகளுக்கு பராமரிப்புக் கட்டணம் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.
2) திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
3)மின்சார கட்டணங்கள், சொத்து வரி ஆகியவைகள் திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும்.
4) ஏற்கனவே நாம் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறும் போது; ''திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை அதிகபட்சம் ரூ.250 வரை அதிகரிக்க கோரிக்கை வைத்துள்ளோம். பெரிய நடிகர்கள் வருடத்திற்கு 2,3 படங்களில் நடிக்க வேண்டும். அதேபோல் முன்னணி இயக்குநர்கள் சிறிய நடிகர்கள் மற்றும் புதுமுகங்களை வைத்தும் படம் இயக்க வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், ''திரையரங்குகளில் ஐபிஎல் கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்ப அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான பாதுகாப்புகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானதால்தான் அன்று கலவரம் நடந்தது. ஆனால், கிரிக்கெட் போன்ற நிகழ்ச்சிகளை ஒரு காட்சி ஒளிபரப்ப அனுமதி வேண்டும். அதனால் எந்தவித பிரச்னையும் வராது.
தற்போது உள்ள சூழலில் விற்கப்படும் தின்பண்டங்களால் தான் திரையரங்குகள் பிழைத்து வருகின்றன. விநியோகஸ்தர்கள் எங்களிடம் 75 சதவீதம் பணம் வாங்குவதை 50 சதவீதமாக குறைத்துக் கொண்டால் நாங்கள் தின்பண்டங்களின் விலையை குறைத்துக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:EPS; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம்