சென்னை: தஞ்சாவூர் மாணவி மரணம் தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெற தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும், கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏபிவிபி அமைப்பினர் கடந்த 17ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 35 பேரை தேனாம்பேட்டை காவல் துறையினர் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்தனர். கைதான 35 பேரில் மூன்று பேர் சிறுவர்கள் என்பதால் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 32 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 32 பேரில் 12 பேர் கைதாகும்போது பொய்யான பெயரையும், போலியான முகவரியையும் தேனாம்பேட்டை காவல் துறையினரிடம் கொடுத்துள்ளனர். இது நீதிமன்ற காவலுக்காக மாஜிஸ்திரேட் முன்பு முன்னிறுத்தும்போது காவல் துறைக்குத் தெரியவந்தது.
12 பேர் மீது மற்றொரு வழக்கு
இதையடுத்து தேனாம்பேட்டை காவல் துறையினர் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 12 பேர் மீது மற்றொரு வழக்கு ஒன்றைப் பதிவுசெய்தனர். பொய்யான ஆவணத்தைப் புனைதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மீண்டும் 12 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த 32 பேர் பிணை கோரி எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.
நிபந்தனை பிணை
இந்த மனு மீதான விசாரணை இன்று (பிப்ரவரி 21) நடந்தபோது, ஏபிவிபி அமைப்பினருக்காக வழக்கறிஞர் பால்கனகராஜ் முன்னிலையானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் தலைமைப் பெருநகர குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோதண்டராஜு 32 பேருக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
ரத்த சம்பந்தமான சொந்தங்கள் என்றால் ஒருவர் உத்தரவாதம் தந்தால் போதும், மற்றவர்கள் என்றால் இரண்டு பேர் தர வேண்டும். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் ஒத்துழைக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவுகளை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த 32 பேரில் 12 பேர் மீது மற்றொரு வழக்கு ஒன்று இருக்கிறது. அந்த வழக்கில் 12 பேரும் இன்னும் பிணை மனு தாக்கல்செய்யவில்லை. அதனால் 12 பேர் விடுதலையாக வாய்ப்பு இல்லை. 20 பேர் மட்டுமே விடுவிக்கப்படுவர் எனக் காவல் துறைத் தரப்பில் கூறப்பட்டது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கைக்குத் தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்!