சென்னை: ஐஸ் ஹவுஸ் முருகப்பன் தெருவிலுள்ள சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் அருகே 30 ஆண்டுகள் பழமையான இலவம் பஞ்சு மரம் ஒன்று 70 அடி நீளத்தில் இருந்தது. இந்நிலையில் நேற்று (டிச.9) நள்ளிரவு மாண்டஸ் புயல் காரணமாக, அப்போது வீசிய சூறைக்காற்றால் அந்த பெரிய மரம் வேரோடு சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் சுமார் 30 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது சேதமடைந்தது. மேலும், விழுந்த மரத்தின் கிளைகள் அருகே உள்ள வீட்டின் கூரை மீதும் விழுந்ததால் அப்பகுதியிலிருந்த வீடும் கடும் சேதமடைந்தது. அது மட்டுமல்லாமல் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் மரம் விழுந்த விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்தன.
நள்ளிரவு நேரம் என்பதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பொருட்சேதமானது ஏற்பட்ட நிலையில், திருவல்லிக்கேணி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சரிந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்நிலையில் மாண்டஸ் புயலால் வீசிய சூறைக்காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த பழமையான மரம் வேரோடு சரிந்து விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நிரம்பி மறுகால் போன போளிவாக்கம் ஏரி; திருவள்ளூர்- ஸ்ரீபெரும்புதூர் இடையே போக்குவரத்து பாதிப்பு