சென்னை: பெரம்பூர் அடுத்த திரு.வி.க.நகரை சேர்ந்தவர் நாற்பது வயது நபர். இவரது மகளான 13 வயது சிறுமி பெரம்பூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் (மார்ச் 10) மதியம் உடல்நிலை சரியில்லை என்று பள்ளியில் கூறிவிட்டு பாதிலேயே வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
பள்ளியிலிருந்து கிளம்பிய சிறுமி வீட்டிற்கு வந்து சேரவில்லை, மாலை வெகு நேரமாகியும் மகள் வீட்டிற்கு வராததால் அவரது தந்தை சந்தேகம் அடைந்து பள்ளிக்குச் சென்று கேட்டுள்ளார். அப்போது பள்ளியிலிருந்த ஆசிரியர்கள், அவர் மதியமே உடல்நிலை சரியில்லை என்று கூறி கிளம்பி விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை, இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த செம்பியம் காவல் துறையினர், இது குறித்த விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில் நேற்று (மார்ச்.11) சேலம் பகுதியிலிருந்து சிறுமியின் பெற்றோரைத் தொடர்பு கொண்ட குழந்தைகள் நல அமைப்பினர், காணாமல் போன சிறுமி சேலத்தில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் செம்பியம் காவல் துறையினர் சேலத்திற்குச் சென்று சிறுமியை மீட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி அதிக நேரம் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் மூழ்கி இருந்தது தெரியவந்தது.
மேலும், சேலத்தைச் சேர்ந்த ஒருவர் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார். இதனால், சிறுமி தனது காதலனைப் பார்ப்பதற்காகப் பள்ளியை கட் அடித்து விட்டு, கோயம்பேடு சென்று கோயம்பேட்டிலிருந்து பேருந்து மூலமாகச் சேலம் சென்றுள்ளார். அங்குத் தனது காதலனைப் பார்த்துள்ளார்.
பின்னர், மீண்டும் இரவு சேலம் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து ஏறும்போது சிறுமி பள்ளி உடையிலிருந்ததை அங்கிருந்த குழந்தைகள் நல ஆர்வலர்கள் பார்த்துள்ளனர். தொடர்ந்து அந்த சிறுமியிடம் அவர்கள் விசாரணை செய்து அவரது பெற்றோருக்குத் தகவல் அளித்தது தெரியவந்தது. இதனை அடுத்து சிறுமிக்குப் அறிவுரை கூறிய செம்பியம் காவல் துறையினர் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: போதையில் பாட்டியிடம் வம்பு - இளைஞர்கள் தர்ம அடி வாங்கிய வீடியோ வைரல்!