சென்னை: பெரம்பூர் பேரக்ஸ் சாலை வசந்தி திரையரங்கம் அருகே உள்ள பழைய கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்நிலையில் மழையின் காரணமாக இன்று காலை இடிந்து விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து எழும்பூர், வேப்பேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பெரம்பூர் பகுதியை சேர்ந்த உமர் என்பவருக்கு சொந்தமான பேரக்ஸ் சாலையில் உள்ள கட்டடம் நூறாண்டுகள் பழமை வாய்ந்தது. இது தரமற்ற கட்டடம் எனவும், இந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் மூன்று மாதத்திற்கு முன்பாக கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். நோட்டீஸ் அனுப்பிய போது இதில் குடியிருந்த நபர்கள் இந்த கட்டிடத்தை காலி செய்துவிட்டனர்.
பின்னர் மூன்று மாதங்களாகியும் கட்டட உரிமையாளர் உமர் கட்டடத்தை இடிக்காததால் மாநகராட்சி உதவி பொறியாளர் சார்பில் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் கட்டட உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டது. குறிப்பாக ஸ்திர தன்மை இல்லாத இந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு கட்டட உரிமையாளர் எனவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் கட்டடத்தை சுற்றி இரும்பு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் கட்டடம் அருகே நடந்து செல்லாத வண்ணம் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் எந்த நேரத்திலும் இடியும் நிலையிலிருந்த இந்த கட்டடம், நேற்று இரவு பெய்த மழையில் உறுதித் தன்மை இழந்து இன்று காலை 10.30 மணி அளவில் இடிந்து விழுந்துள்ளது.
ஏற்கனவே கட்டடத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் போடப்பட்டுள்ளதால் சாலையில் சென்ற யாருக்கும் விழுந்ததால் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டட விபத்து குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின் காரணமாக பட்டாளம் - பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: RN Ravi: "விமர்சனங்களை எதிர்கொள்ள வலிமை கொடுத்தது பகவத்கீதை" - ஆளுநர் ஆர்.என்.ரவி!