சென்னை பைகிராப்ட்ஸ் சாலையில் வசித்து வருபவர் டில்லி(75). இவர் தனது சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார். இவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு உண்டான பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகின்றனர்.
இவரது வீட்டில் பெரம்பூரைச் சேர்ந்த செல்வி என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் வீட்டுவேலை செய்து வந்தார். இந்த நிலையில் செல்வியின் நடவடிக்கை சரியில்லாததால் டில்லி கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேலையை விட்டு நிறுத்தினார்.
மேலும் டில்லிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் டில்லி கடந்த ஜனவரி மாதம் மேல்தளத்தில் வைத்திருந்த பீரோவை பார்த்த போது அதிலிருந்த 94சவரன் நகைகள், மூன்று லட்ச ரூபாய் பணம், 7 கிலோ வெள்ளி பொருள்கள் காணாமல் போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஆனால், வயது மூப்பின் காரணமாக கரோனா தொற்று பரவி இருந்ததால் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி டில்லி அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
இப்புகாரில், பணிப்பெண் செல்வி மீது சந்தேகம் இருப்பதாக கூறி தெரிவித்து இருந்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி, செல்வியை கைது செய்துள்ளனர். விசாரணையில் கொள்ளையடித்த நகையை தனது கணவர் சரவணனிடம் கொடுத்து விற்று பணமாக மாற்றியது தெரியவந்தது.
மேலும், அவரிடமிருந்து 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம், 17 சவரன் நகை ஆகியவற்றையும், வெள்ளி பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் செல்வி, அவரது கணவர் சரவணன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.