சென்னை: சுதேசி இயக்கத்தின் நினைவினை போற்றும் வகையில் 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று நாடு முழுவதும் தேசிய கைத்தறி நாள் விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் 8ஆவது தேசிய கைத்தறி நாள் விழா இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சிறப்பு மெகா பட்டு மேளா, அதிரடி ஆடி தள்ளுபடி விற்பனை கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவினை தொடங்கி வைத்தும், நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, இந்தியாவே திரும்பி பார்க்கிற அளவுக்கு இந்து சமய அறநிலையத் துறை உள்ளது. அவரை போல பணியாற்ற யாராலும் முடியாது முதலமைச்சர் அவரை எப்படி தேர்வு செய்தார் என்று தெரியவில்லை என்று சேகர் பாபுவை புகழ்ந்து பேசினார்.
அண்ணா மற்றும் கலைஞர் இருந்து இருந்தால் எப்படி நெசவாளர்களுக்கு செய்து இருப்பாரோ அதை முதலமைச்சர் செய்து வருகிறார். கடந்த ஆண்டு நெசவாளர்களுக்கு முதல் பரிசு தொகை 1 லட்சமாக இருந்தது. தற்போது அது 5 லட்சமாகவும், 2ஆவது பரிசு 75 ஆயிரம் இருந்தது தற்போது அது 3 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உலகத்தில் ஸ்டாலின் மாதிரி ஒரு முதலமைச்சரை பார்க்க முடியாது. நெசவாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. பல்வேறு நல்ல திட்டங்கள் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என பேசினார்.
அதனைத் தொடர்ந்து கைத்தறி நாள் விழாவில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு தங்களது தனித்துவமான பங்களிப்பை வழங்கி வரும் நெசவாளர்களை கண்டறிந்து அவர்களை கவுரவிக்கும் வகையில் "திறன்மிகு நெசவாளர் விருதும்" கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை மேம்படுத்தும் வகையில் கண்கவர் வடிவமைப்புகளை திறம்பட உருவாக்கி வழங்கும் சிறந்த வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும் "சிறந்த வடிவமைப்பாளர் விருதும்" வழங்கப்பட்டது.
மேலும் திறன்மிகு நெசவாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 60 நெசவாளர்களில் முதல் பரிசாக 20 பேருக்கு தலா ரூபாய் 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூபாய் 6 ஆயிரம், மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூபாய் 4 ஆயிரம் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 வடிவமைப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூபாய் 10 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூபாய் 5 ஆயிரம் வீதம் காசோலையும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கருணாநிதி நான்காம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் அமைதி பேரணி